வியாபம்: இந்திய தேர்வு முறைகேடு தொடர்பான சந்தேக மரணங்கள்

இந்தியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேசத்தில், அந்த மாநில தேர்வு அமைப்பான வியாவ்சாயிக் பரீக்ஷா மண்டலில் (வியாபம்) 2013 ஆம் ஆண்டு மிகப்பெரிய மோசடி நடைபெற்றது. வியாபம் வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு மோசடி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. தேர்வுகளில் ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல், முறைகேடு மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும், 2013 ஆம் ஆண்டில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, முறைகேட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கத் தொடங்கியபோது, வியாபம் ஊழலின் திடுக்கிடும் திருப்பம் வெளிப்பட்டது. மாரடைப்பு, நெஞ்சு வலி, சாலை விபத்து, தற்கொலை என அவர்களின் அனைத்து மரணங்களும் அகாலமானவை மற்றும் மர்மம் நிறைந்தவையாக இருந்தன.

இப்படி ஒருவர் பின் ஒருவராக இறந்த நபர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இறந்தார்கள்?அவர்களின் மரணத்துக்கான தெளிவான பின்னணி என்ன? என்று, இந்த மர்ம மரணங்கள் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன. இதையடுத்து, வியாபம் முறைகேடு குறித்து இந்தியாவின் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.

தொடர்ந்து படிக்க, மவுசை கீழ்நோக்கி இழுக்கவும்

நம்ரதா தாமோர்
வயது: 19
இறப்புக்கான காரணம்:
தற்கொலை என்று
சந்தேகிக்கப்படுகிறது

இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ அறிவியல் படித்துவந்த 19 வயது மாணவி நம்ரதா தாமோர், ஜனவரி 2012 தொடக்கத்தில் காணாமல் போனார். துரதிர்ஷ்டவசமாக, ஜனவரி 7 ஆம் தேதி இரவு, உஜ்ஜயினி அருகே ரயில் தண்டவாளத்தின் அருகே அவரது உடல் கண்டுடெடுக்கப்பட்டது.

அவர் மூச்சுத்திணறலுக்கு ஆளானார் எனவும், குறிப்பாக வன்முறையின் விளைவாக ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு ஆளானார் என்றும் ஆரம்பநிலை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மாணவியின் மரணத்தை ஒரு கொலை என்று வகைப்படுத்த வழிவகுத்தது.

மேலும், மாணவியின் உதடுகளில் சிராய்ப்பு இருந்தது குறித்தும், சில பற்கள் இல்லாதது பற்றியும் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த விஷயங்களை போலீசார் நிராகரித்தனர். அத்துடன், இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், மாணவியின் மரணம் தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஒரு முன்னணி செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் அக்ஷய் சிங், மாணவியின் மரணம் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, அவரது தந்தையைப் பேட்டிக் காணச் சென்றார். ஆனால் நேர்காணலைப் பதிவு செய்வதற்கு முன் அவருக்கு இருமல் வந்ததுடன், வாயில் நுரை வரத் தொடங்கியது.

அக்ஷய் சிங்
வயது: 38
இறப்புக்கான காரணம்:
தெரியவில்லை

மருத்துவக் கல்லூரி மாணவி நம்ரதா தாமோர் 2012 இல் மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், ஜபுவாவில் உள்ள மாணவியின் தந்தை மெஹ்தாப் சிங் தாமோரின் வீட்டுக்கு பத்திரிகையாளர் சிங் சென்றார். தனது மகளின் மரணம் குறித்து பத்திரிக்கையாளரிடம் பேச அவரது தந்தை ஒப்புக்கொண்டார்.

அத்துடன் தன் மகளின் மரணம் தொடர்பான புகார் மனுக்கள், காவல்துறை மற்றும் நீதிமன்ற அறிக்கைகளின் நகல்களை அவர் சிங்கிடம் பகிர்ந்துக் கொண்டார். அவருக்கு தேநீர் வழங்கப்பட்டது. சிங் தேநீரைப் பருகிக் கொண்டிருந்தபோதே அவரது முகம் உறைந்து, வாயில் இருந்து நுரை வழிய தரையில் மயங்கி விழுந்தார்.

"நாங்கள் அவரது ஆடைகளை அவிழ்த்து, முகத்தில் தண்ணீர் தெளித்தோம். அவரது நாடித்துடிப்பைச் சரிபார்த்தேன். அப்போதே அக்ஷய் சிங் இறந்துவிட்டார் என்பது எனக்கு தெரிந்துவிட்டது" என்று பத்திரிகையாளர் சிங்கை, தாமோரின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற இந்தூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராகுல் காரியா, அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

இருப்பினும் அவர் முதலில் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மாரடைப்பால் இறந்தார் என்றும், இறந்த நேரத்தில் அவரது இதயத்தின் அளவு பெரிதாக இருந்தது எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பத்திரிகையாளரின் மரண சம்பவம் நிகழ்ந்த ஒரு நாள் கழித்து, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசு மருத்துவக் கல்லூரியின் டீன், புதுதில்லியில் ஓர் ஹோட்டலில் இறந்து கிடந்தார். வியாபம் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலை ஒன்றிணைப்பதாக அவர் கூறியிருந்தார்.

டாக்டர். அருண் சர்மா
வயது: 64
இறப்புக்கான காரணம்:
தெரியவில்லை

ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியின் டீனாக இருந்த சர்மா, மத்தியப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையிடம் (STF) 200 ஆவணங்களைச் சமர்பித்திருந்ததாகக் கூறப்பட்டது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை அவர் ஒருங்கிணைத்திருந்தார்.

அக்ஷய் இறந்த ஒருநாள் கழித்து, டெல்லியின் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஹோட்டல் உப்பலில், தனது படுக்கையில் சர்மா இறந்து கிடந்தார்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெறவிருந்த ஒர் ஆய்வுக்காக அவர், திரிபுரா தலைநகர் அகர்தலாவுக்குச் சென்று கொண்டிருந்தார். போகும் வழியில் டெல்லியில் தங்கியபோது அவருக்கு அப்படியொரு சோகமான முடிவு நேர்ந்தது.

அவர் இறந்து கிடந்த அறையில் கிட்டத்தட்ட காலியான மதுபாட்டிலை போலீசார் கண்டெடுத்தனர். சர்மா அதிகமாக குடித்துவிட்டு இரவில் வாந்தி எடுத்தார். மேலும், “இயற்கையான காரணங்களால்” அவர் இறந்துவிட்டார் என்று விசாரணைக்கு நெருக்கமான அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்செயலாக, மர்மமான சூழ்நிலையில் இறந்த மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது டீன் சர்மா ஆவார். ஒராண்டுக்கு முன், ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியின் மற்றொரு டீன் தனது வீட்டு தோட்டத்தில் தீக்குளித்து தறகொலை செய்து கொண்டார்.

டாக்டர் டி.கே.சகல்லி
வயது: -
இறப்புக்கான காரணம்:
தற்கொலை என
சந்தேகிக்கப்பட்டது

ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியின் அப்போதைய டீன் டாக்டர் டி.கே., வியாபம் ஊழல் குறித்து கல்லூரியில் நடைபெற்றுவந்த நிர்வாகரீதியான விசாரணைக்கு பொறுப்பாளராக இருந்தார்.

குறிப்பிட்ட நாள் காலை 8:45 மணியளவில் அவர், தீப்பற்றிய உடம்புடன் அலறியடித்தபடி தனது வீட்டிலிருந்து வெளியே ஓடிக்கொண்டிருந்தார். அப்போது டி.கே.,வின் மனைவி நடைபயிற்சிக்கு சென்றிருந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டார எனவும் போலீசார பின்னர் தெரிவித்தனர்.

இருப்பினும், வியாபம் ஊழலில் உண்மையை வெளிகொண்டுவர போராடிக் கொண்டிருந்த தன்னார்வலர்கள் (whistleblowers), டாக்டர் டி.கே., மரணத்தை தற்கொலை என்று ஒரே வார்த்தையில் கூறி கடந்துவிட முடியாது எனவும், அவரது அசாதாரண மரணம் குறித்து மத்திய புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நரேந்திர ராஜ்புத்
வயது35
இறப்புக்கான காரணம்
தெரியவில்லை

ஜான்சி கல்லூரியில் இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS) பட்டம் பெற்ற நரேந்திர ராஜ்புத், ஏப்ரல் 13, 2014 அன்று அகால மரணம் அடைந்தார். அவர் மரணித்ததற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பிய அவர், ஹர்பால்பூரில் ஒரு சிகிச்சை மையத்தை தொடங்கினார்.

ஏப்ரல் 13, 2014 அன்று, வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது ராஜ்புத், தமக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிவிட்டு வீட்டுக்கு திரும்பினார். ஆனால் வீட்டு வாசலிலேயே அவர் சரிந்து விழுந்தார்.

அவரது மரணத்துக்கான தெளிவான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இதன் விளைவாக,, விவசாயிகளுக்கான அரசின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் அவரது குடும்பத்தினர் கோரியிருந்த இழப்பீடும் அவர்களுக்கு கிடைத்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில், வியாபம் ஊழலில் நரேந்திர ராஜ்புத் ஒரு “இடைத்தரகராக” செயல்பட்டு வந்தார் என்று அவர் இறந்தபின், சில மாதங்களுக்கு பிறகு போலீசார் அவரது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது கூறினர்.

அரசு தெரிவித்திருந்த தகவல்களின்படி, 2007 முதல் 2015 ஆம் ஆண்டு வரை, வியாபம் ஊழலில் தொடர்புடைய மொத்தம் 32 பேர் இறந்தனர். ஆனால் இந்த முறைகேடு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, மரண எண்ணிக்கை 40 ஐ தாண்டியிருந்தது. அத்துடன், சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) மற்றும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளிலும் இந்த மரணங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் பல மரணங்கள் வியாபம் ஊழலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

  • ஷைலேஷ் யாதவ்
  • விகாஸ் பாண்டே
  • ஆனந்த் சிங் யாதவ்
  • அன்ஷுல் சச்சான்
  • கியான் சிங் யாதவ்
  • தருண் மச்சார்
  • டாக்டர் ராஜேந்திர ஆர்யா
  • பிரமோத் சர்மா
  • தேவேந்திர நாகர்
  • பாந்தி சிக்கர்வார்
  • தினேஷ் ஜாதவ்
  • நரேந்திர சிங் தோமர்
  • அரவிந்த் ஷக்யா
  • அசுதோஷ் திவாரி
  • குல்தீப் மாரவி
  • விகாஸ் பாரத் சிங்
  • டாக்டர் ராமேந்திர சிங் பதோரியா
  • லலித் குமார் கோலாரியா
  • விஜய் சோட்டாலால் சிங்
  • அமித் சாகர்
  • பிரவீண் யாதவ்

வியாபம் தேர்வுகளில் மோசடிகள் நடைபெற்றது எப்படி?

அரசியல்வாதிகள், செல்வாக்குமிக்க மருத்துவர்கள், கல்லூரி ஊழியர்கள், மாணவர்கள், இடைத்தரகர்கள், வெளியாட்கள் உள்ளிட்டோர் என பல்வேறு தரப்பினர் வியாபம் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆள்மாறாட்டம்

போட்டித்தேர்வு எழுதும் நபராக தங்களைக் காட்டிக் கொள்ளும் நபர்கள், விண்ணப்பதாரர்கள் சார்பாக தேர்வு எழுதுவார்கள். இந்த ஆள்மாறாட்ட திட்டத்தை காதும் காதும் வைத்தாற்போல் செயல்படுத்தும் இடைத்தரகர்கள், ஆள்மாறாட்ட நபர்களை ஏற்பாடு செய்வதற்காக போட்டித் தேர்வாளர்களிடமிருந்து பணம் பெறுவார்கள். இடைத்தரகர்கள், ஆள்மாற்றாட்ட நபர்கள், போட்டித்தேர்வர்கள் மற்றும் அவர்கள் தேர்வு எழுதும் மையங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மோசடிகளை அரங்கேற்றினர்.

மாணவர்கள் சார்பாக ஆள்மாறாட்டம் செய்பவர்களை பின்பற்றிய படிகள்

இந்த மோசடி நடைமுறையை எளிதாக்கும் வகையில் தேர்வு மையங்களிலும் முறைகேடு நடந்தது. முழு மோசடியும் இடைத்தரகர்களின் வலையமைப்பு, ஆள்மாறாட்டம் மற்றும் சமரசம் செய்யப்பட்ட தேர்வு மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் அரங்கேறியது.

ஆள்மாறாட்ட நடைமுறை

ஆள்மாறாட்டம் செய்வதில் தேர்வு பதிவு எண்களை முறைகேடாக கையாள்வது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்து வந்தது. இதில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்காக உருவாக்கப்படும் போலி பதிவெண்கள், விண்ணப்பதாரர்களின் பதிவெண்ணுக்கு முன்போ, பின்போ வரும்படி ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் அந்த நபர்கள் தேர்வில் எளிதில் முறைகேடு செய்து, போட்டியாளர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வழிவகுத்து வந்தனர்.

என்ஜின் போகி அமைப்பின் படம்

விடைத்தாளில் முறைகேடு

இடைத்தரகர்கள் தேர்வு நடைமுறைகளை கையாள வசதியாக, தேர்வர்கள் தங்கள் விடைத்தாள்களில் குறிப்பிட்ட பக்கங்களை வேண்டுமென்றே காலியாக விடுவார்கள். காலியாக விடப்பட்ட விடைத்தாள் பக்கங்களில், இடைத்தரகர்கள் கணினியின் உதவியுடன் சரியான விடைகளை எழுதியோ, ஏற்கெனவே போட்டியாளர்கள் எழுதியிருக்கும் பதில்களை திருத்தியோ அவர்கள் தேர்ச்சி மதிப்பெண்களை பெற உதவுவார்கள்.

இடைத்தரகர்கள் மார்க்ஷீட்டை நிதானப்படுத்துகிறார்கள்

இதுபோன்று தேர்வுகளில் நூதனமாக முறைகேடு செய்து வெற்றிபெறும் போட்டியாளர்களை தவிர, தேர்வு நடைமுறைகளை தவிர்த்து, ஆனால் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக பணம் செலுத்தும் வழிமுறையை நாடிய போட்டியாளர்களும் இருந்தனர்.

அத்துடன், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் போன்ற செல்வாக்குமிக்க நபர்கள் இந்த மோசடியில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், நிதி ஆதாயங்களை பெற இந்த முறைகேட்டை பயன்படுத்தி கொண்டனர்.

வியாபம் முறைகேடு மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களாக குற்றம்சாட்டு, மர்மமான முறையில் இறந்த நபர்களில் பெரும்பாலோர் இடைத்தரகர்கள் என தெரிய வந்தது.

இடைத்தரகர்கள் உள்ளிட்டோரின் மரணங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கையில் இருந்த முரண்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. மேலும் இந்த வழக்குகளை முழுமையாகவும், நடுநிலையுடனும் விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. சிபிஐ மேற்கொண்ட விசாரணை வியாபம் ஊழலில் அரங்கேறிய பல்வேறு முறைகேடுகள் மற்றும் மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

இருப்பினும், இந்த வழக்குகளில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கப் பெறாததால், பெரும்பாலான வழக்குகளை பாதியிலேயே கைவிட வேண்டியதானது. உதாரணமாக, உஜ்ஜயினி அருகே ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ மாணவி நம்ரதா தாமோரின் மரணம் தொடர்பான வழக்கை முடித்துவைக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மூன்றாவது முறையாக கோரியுள்ளது. அவரது மரணம் தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டதையடுத்து சிபிஐ இந்த கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்து வருகிறது. ஆனால், தன் மகளின் மரணம் குறித்த வழக்கு விசாரணையில் தனக்கு திருப்தி இல்லை என்று நம்ரதாவின் தந்தை மெஹ்தாப் தாமோர் பிபிசியிடம் பேசியபோது கூறினார்.