உலகம் முழுவதுமிருந்து 2023ஆம் ஆண்டுக்கான ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.
இதில் மனித உரிமை வழக்கறிஞர் அமல் குளூனி, ஹாலிவுட் நட்சத்திரம் அமெரிக்கா ஃபெரெரா, பெண்ணியவாதிகளின் அடையாளமான குளோரியா ஸ்டெய்னெம், முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா, அழகுக்கலை தொழில் நிறுவனரான ஹுடா கட்டன் மற்றும் பாலோன் டோர் விருது வென்ற கால்பந்து வீராங்கனை ஐடானா பொன்மேட்டி ஆகியோர் அடங்குவர்.
கடுமையான வெப்பம், காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் போன்றவை தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்திய இந்த வருடத்தில், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், அதன் தாக்கங்களைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவும் தங்கள் சமூகங்களுக்கு உதவ உழைக்கும் பெண்களையும் இந்தப் பட்டியல் சுட்டிக்காட்டுகிறது.
ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு, COP28 ஆகியவற்றுக்கு முன்னதாக பிபிசி 100 பெண்கள் பட்டியலில், 28 காலநிலை முன்னோடிகளையும் நாங்கள் அறிவித்திருக்கிறோம்.
பெயர்கள் எந்தவொரு குறிப்பிட்ட வரிசையிலும் பட்டியலிடப்படவில்லை
பழங்குடிகள் மற்றும் LGBTQ+ உரிமைகளுக்கான ஆர்வலர்
மியான்மர் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள தாய்லாந்து பகுதியில் வசிக்கும் மேட்சா, காலநிலை மாற்றம் மற்றும் எல்லை மோதல்களின் பாதிப்புகள் என இரண்டையும் அனுபவித்துள்ளார். சிறுபான்மை மக்களுக்கான நலன்களை முன்னிறுத்தி இவரின் பணிகள் உள்ளன.
இவர் சங்சான் அனகோட் யாவச்சோன் மேம்பாடு என்ற திட்டத்தை நிறுவியுள்ளார். இது ஆயிரக்கணக்கான நாடற்ற மற்றும் நிலமற்ற பழங்குடிப் பெண்கள், சிறுமிகள் மற்றும் LGBTQ+ சமூகத்தின் இளம் உறுப்பினர்களுக்கு கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு இன சிறுபான்மை மற்றும் பழங்குடி தன்பாலின லெஸ்பியன் பெண்ணியவாதியான மேட்சா, இந்த பிராந்தியத்தில் பாலின அடிப்படையிலான வன்முறையை நிறுத்துவதற்கான இயக்கத்தில் ஒரு முன்னணி பங்காற்றுகிறார். அதே நேரத்தில் இடம்பெயர்ந்த மற்றும் உரிமையற்ற மக்களுக்கான நில உரிமைகள் மற்றும் காலநிலை நீதிக்காகவும் வாதிடுகிறார்.
பழங்குடி சமூகங்கள், LGBTQIA+, பெண்கள் மற்றும் சிறுமிகளின் அர்த்தமுள்ள பங்கேற்பு மற்றும் குரல்கள் இல்லாமல் நிலையான காலநிலை தீர்வுகள் இருக்க முடியாது.
மேட்சா ஃபார்ன்-இன்
மாடல் மற்றும் இன்ஃப்ளுயன்சர்
93 வயதாகும் எல்லாரும் தனக்கு இன்ஸ்டாகிராமில் 2, 35,000 பின்தொடருபவர்கள் உள்ளார்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் இத்தாலியை சேர்ந்த வயதான பாடி பாசிட்டிவிட்டி இன்ஃப்ளுயன்சருக்கு இது ஒரு தொடக்கம் மட்டுமே.
இரண்டாம் உலகப்போரின் போது வாழ்ந்தது தொடங்கி , தனது 28 வயது மகளின் இறப்பு மற்றும் கணவரின் இறப்பு என பலவற்றையும் தாங்கி கொண்டு வாழ்ந்து வருகிறார் லிசியா ஃபெர்ட்ஸ்.
இவரை உற்சாகப்படுத்துவதற்காக இவரது பேரன் இவருக்காக இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை திறந்து கொடுத்துள்ளார். அதன் பிறகு இவரது வண்ணமயமான உடை மற்றும் பிரகாசமான புன்னகை இவரை சோசியல் மீடியா பிரபலமாக மாற்றி விட்டது.
இவர் தனது சுயசரிதை எழுதியுள்ளார் மற்றும் 89வது வயதில் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்திற்காக நிர்வாண மாடலாக இடம்பெற்றுள்ளார்.
இவர் ஒரு முதுமையடைந்தவர்களுக்கு எதிரான பாகுபாடு, ஃபெமினிஸம் மற்றும் LGBTQ+ செயற்பாட்டாளர் ஆவார். உடல் குறித்த நேர்மறை எண்ணங்களை ஊக்குவித்தல் மற்றும் வயதானவர்கள் மீதான பார்வையை மாற்றுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
தீ விபத்தில் சிக்கி மீண்டவர்.
ஜன்னதுல் ஃபெர்தெளஸ் தீ விபத்தில் சிக்கி உடலில் 60% காயங்களுடன் தப்பியவர் அதைத் தொடர்ந்து திரைப்பட இயக்குனர்,எழுத்தாளர், மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சார செய்யக்கூடிய ஆளாக உருவெடுத்தார்.
மேலும் வாய்ஸ் அன்ட் வியூஸ் என்ற மனித உரிமை அமைப்பை துவங்கி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காக பாடுபட துவங்கினார்.
நண்பர்களால் ஐவி என இவர் அழைக்கப்படுகிறார். இவர் ஐந்து குறும்படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். மேலும் மாற்றுத்திறனாளிகள் குறித்து 3 நாவல்கள் எழுதியுள்ளார். அவரது தனது கதைகளின் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறார்.
ஃபெர்தௌஸ் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். மேம்பாட்டு ஆய்வுகளிலும் பட்டங்களை பெற்று இருக்கிறார்.
கால்நடை மேய்ப்பவர்
கடைசியாக வாழும் வாக்கி இன மேய்ப்பவர்களில் ஒருவரான அஃப்ரோஸ்-நுமா, சுமார் மூன்று தசாப்தங்களாக ஆடு, சடை எருமை மற்றும் செம்மறி ஆடுகளை கவனித்து வருகிறார்.
தனது தாய் மற்றும் பாட்டிகளிடம் இருந்து தொழில் கற்றுக்கொண்ட அவர், பாகிஸ்தானின் ஷிம்ஷால் பள்ளத்தாக்கில் இப்போது அழிந்து கொண்டிருக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தின் ஓர் அடையாளமாக இருக்கிறார்.
ஒவ்வொர் ஆண்டும், இந்த மேய்ப்பர்கள் தங்களின் கால்நடைகளை கடல் மட்டத்திலிருந்து 4,800மீ (16,000 அடி) உயரத்திலுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்குள்ள நிலங்களில் கால்நடைகளை மேயவிடுகின்றனர். மேலும் கால்நடைகளின் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
இந்த வருமானத்தால் அந்த கிராமத்திற்கு செல்வச்செழிப்பு வந்தது. அவர்களின் குழந்தைகளும் கல்வி கற்கின்றனர். இவர் வாழ்ந்த பள்ளத்தாக்கில் ஒரு ஜோடி காலணிகளை வைத்திருந்த முதல் பெண் அஃப்ரோஸ்-நுமா தான் என்பதை நினைவூட்டுகிறார்.
தொலைக்காட்சி தொகுப்பாளர்
ஆகஸ்ட் 2021ல் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபோது, நாட்டில் ஒளிபரப்பு பணிகளை மேற்கொண்ட மிகச் சில பெண் செய்தி தொகுப்பாளர்களில் ஹொசாய் அஹ்மத்ஸாயும் ஒருவர்.
ஊடகங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கவலைகள் மற்றும் சமூக எதிர்ப்புகள் இருந்தபோதிலும் ஷம்ஷாத் தொலைக்காட்சியில் அவர் தனது பணியைத் தொடர்கிறார்.
பல தலிபான் அதிகாரிகளை இவர் நேர்காணல் செய்துள்ளார், ஆனால் அவர்களிடம் என்ன கேட்க முடியும் என்பதில் இவருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி கேட்க முடியாத சூழல் உள்ளது.
அஹ்மத்சாய் சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் பின்னணியைக் கொண்டவர். ஏழு ஆண்டுகளாக ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். தலிபான்களால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் பெண் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்துகிறார்.
பசுமை ஆற்றல் ஆலோசகர்
தஜிகிஸ்தானின் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மின்சாரம் அல்லது விறகு போன்ற ஆற்றல் ஆதாரங்களை அணுகுவதற்கு அடிக்கடி போராடுகிறார்கள். சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளரான நடாலியா இட்ரிசோவா, இந்த ஆற்றல் நெருக்கடிக்கு நடைமுறை தீர்வுகளை முன்வைக்கிறார். மேலும் இயற்கை வளங்கள் மற்றும் ஆற்றல்-திறனுள்ள தொழில்நுட்பங்கள், பொருட்களைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்கிறார்.
பயிற்சியைத் தவிர, ஆற்றல் சேமிப்பு உபகரணங்களான சோலார் சமையலறைகள் மற்றும் பிரஷர் குக்கர்களை அவரது நிறுவனம் வழங்குகிறது. இந்த உபகரணங்கள் மூலமாக இட்ரிசோவா, சமையலறையில் பெண்களின் நேரத்தை குறைத்து, வீட்டு வேலைகளில் பாலின சமத்துவத்தை நிறுவ முயன்று வருகிறார்.
தற்போது இட்ரிசோவா, காலநிலை மாற்றம் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளை பாதிக்கிறது என்பது குறித்து சமூகங்களுக்கு பயிற்சி அளித்து, அரசியல் விவாதங்களில் இந்தக் குரல்கள் கேட்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிகளைக் கண்டறிந்து வருகிறார்.
உலகெங்கிலும் உள்ள தீவிர வானிலை நிகழ்வுகள் மனிதர்கள் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாதவர்கள் என்ற கடைசி எச்சரிக்கையை நமக்குத் தருகின்றன. கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளாமல் இயற்கையை நாம் அலட்சியமாக சுரண்ட முடியாது.
நடாலியா இட்ரிசோவா
வளங்குன்றா சுற்றுலா நிபுணர்
சுற்றுலாத் துறையின் வெகுசில காலநிலை விஞ்ஞானிகளில் ஒருவரான சூசன் எட்டி, இத்துறையை வளங்குன்றா எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வதில் ஆர்வமாக உள்ளார்.
சிறிய குழுக்களை சாகச பயணத்திற்கு அழைத்துச் செல்லும் வணிக நிறுவனமான இண்டெர்பிட் டிராவல் நிறுவனத்தின் உலகளாவிய சுற்றுச்சூழல் தாக்க மேலாளராக அவர் பணிபுரிகிறார். அறிவியல் அடிப்படையிலான கார்பன் குறைப்பு இலக்குகளுடன் முதல் டூர் ஆபரேட்டராக இந்நிறுவனம் நிறுவனம் மாறியது.
கார்பன் தடங்களை குறைக்கவிரும்பும் பயண வணிக நிறுவனகளுக்கான திறந்த கையேட்டை எட்டி உருவாக்கியுள்ளார். மேலும் 400 பயண நிறுவனங்கள் இணைந்து காலநிலை அவசரநிலையை அறிவித்த 'டூரிசம் டிக்ளேர்ஸின்' முக்கிய அங்கமாக எட்டி விளங்கினார்.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான லட்சிய இலக்குகளை நிர்ணயித்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்து, நீண்டகால உமிழ்வு குறைப்பு இலக்குகளை உறுதி செய்வதன் மூலம் காலநிலை நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அதிக வணிகங்கள் அங்கீகரிப்பதை இன்று நாம் காண்கிறோம்.
சூசன் எட்டி
பள்ளி ஆசிரியர்
9/11 தாக்குதலுக்கு பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பள்ளி பருவத்தை கழித்த தனக்கு, போலிச் செய்திகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகிறார், அமெரிக்காவில் இடைநிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் சாரா ஓட்.
அறிவியல் பாடத்தை படித்திருந்தாலும், காலநிலை மாற்றம் உண்மையில் நடக்கிறதா என்று சந்தேகம் சில காலம் வரை சாரவுக்கு இருந்தது.
அதை தவறு என்று ஒப்புக்கொள்வதற்காக உண்மையைத் தேடி தனது பயணத்தை அவர் தொடங்கினார். அந்த பயணம், அறிவியல் கல்விக்கான தேசிய மையத்தின் காலநிலை மாற்ற தூதராக சாரா மாறும் அளவுக்கு நீண்டது.
இப்போது ஜார்ஜியா மாகாணத்தில் பணியாற்றும் சாரா, தனது மாணவர்களுக்கு அறிவியல் வழியாக காலநிலை மாற்றத்தை கற்பித்து வருகிறார். மேலும் இளைய சமூகத்தினர் மத்தியில் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
காலநிலை மாற்றம் என்பது தனிநபரால் மாற்றக்கூடியது அல்ல. மாறாக அனைவரும் சேர்ந்து கவனிக்கவேண்டிய செயல். ஆர்வலர்கள் என்பது ஒரு தோட்டம் போல, அது சில பருவத்தில் மட்டுமே இருக்கும். பின்னர் ஓய்வுக்கு செல்லும். அதனால் பருவம் இருக்கும் போதே செயல்பட வேண்டும்.
சாரா ஓட்
யுடியூபர்
மெக்டொனால்டில் பகுதி நேர வேலை தொடங்கி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றது வரை, வீ கடிவ்ஹுவின் கல்விப் பயணம் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு உத்வேகம் அளித்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, சமூக-பொருளாதாரத்தில் பின் தங்கி ஒரு மாணவியாக வந்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள யுடியூப் சேனலை நிறுவினார், மேலும் தன்னைப் போன்றே மற்றவர்களும் படிப்பை மேற்கொள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் அறிவை பகிர்ந்து கொண்டார்.
கடிவ்ஹு, எம்பவர்டு பை வீவைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள ஆதரவற்ற அல்லது குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை அணுகக்கூடியதாக மாற்ற முயல்கிறது.
அவர் இளைஞர்களுக்கான நடைமுறை சுய உதவி புத்தகத்தை எழுதியுள்ளார் மற்றும் தற்போது கல்வித் தலைமைத்துவத்தில் முனைவர் பட்டம் பெற படித்து வருகிறார்.
அழகுக்கலை தொழில் நிறுவனர்
இவர் அமெரிக்காவில் பிறந்தவர். இவரது பெற்றோர் இராக்கில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள். ஹூடா கட்டன் ஓக்லஹோமாவில் வளர்ந்தார். தனது வாழ்நாள் கனவான அழகுக்கலை துறையில் கால்பதிக்க, கார்ப்பரேட் பணியை துறந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற ஒப்பனை பயிற்சி பள்ளியில் சேர்ந்த பிறகு, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பல அரச குடும்பங்கள் உட்பட ஏ-லிஸ்ட் பிரபலங்களை தனது வாடிக்கையாளர்களாக்கினார்.
இன்ஸ்டாகிராமில் 5 கோடிக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் கொண்டுள்ள இவர், அதிகம் பேர் பின்தொடரும் அழகுக்கலை பிராண்டாக ஆனார்.
கட்டன் தனது அழகுசாதன பிராண்டான ஹுடா பியூட்டியை 2013ஆம் ஆண்டு சாயல் கண் இமைகளை விற்கும் நிறுவனமாக அறிமுகப்படுத்தினார். இன்று, அவரது வணிகம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து, உலகம் முழுவதும் உள்ள 1500 கடைகளில் இவரது நிறுவனத்தின் 140 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மாணவர் மற்றும் சமூக தொழில்முனைவோர்
இரானில் உள்ள உறவினர்களிடம் பேசிய பிறகு, சமூக தொழில்முனைவோரான சோஃபியா கியானி அவரின் உள்ளூர் மொழியில் காலநிலை மாற்றம் குறித்த நம்பகமான தகவல்கள் குறைவாக இருப்பதை உணர்ந்தார். எனவே அவர் தகவல்களை ஃபார்சி மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
க்ளைமேட் கார்டினல்ஸ் என்ற சர்வதேச இளைஞர்கள் தலைமையிலான இலாப நோக்கற்ற குழுவை நிறுவிய பிறகு இது விரைவில் ஒரு பரந்த திட்டமாக விரிவடைந்தது. இது காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்த்து ஆங்கிலம் பேசாதவர்களும் அணுகக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது.
இப்போது இந்த அமைப்பு 80 நாடுகளில் 10,000 மாணவ தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. இந்தக் குழு 100க்கும் மேற்பட்ட மொழிகளில் பத்து லட்சம் காலநிலை மாற்றம் தொடர்பான வார்த்தைகளை மொழி பெயர்த்துள்ளது.
விஞ்ஞான அறிவின் உலகளாவிய பரிமாற்றத்திற்கு மொழி தடைகளை உடைக்க உதவுவதே கியானியின் நோக்கம்.
உலகளாவிய காலநிலை நடவடிக்கை குழுக்களை இளம் ஆர்வலர்கள் உருவாக்கி வளர்த்து வருகின்றனர். லட்சக்கணக்கானவர்களை எதிர்க்க திரட்டியுள்ளனர், புதைபடிவ எரிபொருள் வளர்ச்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மனுக்களை அனுப்பியுள்ளனர் மற்றும் காலநிலை முயற்சிகளுக்கு நிதியளிக்க மில்லியன் கணக்கான டாலர்களை திரட்டியுள்ளனர். வயது அல்லது அனுபவத்தின் அடிப்படையில் நம்மை நாமே நிறுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு உலகின் சவால்கள் மிகப் பெரியவை.
சோஃபியா கியானி
புகைப்படக் கலைஞர்
சுயாதீன புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் எக்ஸ்ப்ளோரர் என பன்முகம் கொண்ட ஆரத்தி குமார்-ராவ் தெற்காசியாவைச் சுற்றி பணிபுரிகிறார். மேலும் காலநிலை மாற்றத்தால் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இவர் ஆவணப்படுத்துகிறார்.
நிலத்தடி நீர், வாழ்விட அழிப்பு மற்றும் தொழில்துறைக்கான நிலம் கையகப்படுத்துதல் ஆகியவை பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, நிலங்களை சுருங்கச் செய்து, லட்சக்கணக்கானவர்களை புலம்பெயரச் செய்து, உயிரினங்களை அழிவை நோக்கித் தள்ளுவதை தனது புகைப்படங்களின் வழியாக உலகிற்கு விவரிக்கிறார் ஆரத்தி.
ஆரத்தி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய துணைக்கண்டத்தை குறுக்கும் நெடுக்குமாக சுற்றி வந்திருக்கிறார். மேலும் அவரது வெளியீடுகள் சுற்றுச்சூழல் அழிவு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பல்லுயிர்களை எப்படி பாதிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
Marginlands: India's Landscapes on the Brink, என்ற அவரது புத்தகம் இந்தியாவின் மிகவும் மோசமான சூழலில் வாழ்பவர்களின் அனுபவங்களை உள்ளடக்கியது.
நிலம், நீர் மற்றும் காற்று ஆகியவற்றுடன் நமது அடிப்படைத் தொடர்பை இழந்ததுதான் காலநிலை நெருக்கடியின் மூலகாரணம். இந்த இணைப்பை நாம் மீட்டெடுப்பது கட்டாயமாகும்.
ஆரத்தி குமார்-ராவ்
ஃபார் லைஃப் தையல் கடையின் இணை நிறுவனர்
நான்காம் கட்ட புற்று நோய்க்கு மூன்று வருடங்கள் தீவிர சிகிச்சை பெற்று, மருந்துகளுக்கு பணம் செலுத்த முடியாமல் தவித்த ஷைர்பு சாகின்பேவா இப்போது குணமடைந்துள்ளார்.
நான்கு புற்றுநோய் நோயாளிகளுடன் சேர்ந்து, ஃபார் லைஃப் தையல் கடையை நிறுவினார். அங்கு தேசிய ஆபரணங்களைப் பயன்படுத்தி பைகளை தயாரித்து விற்கிறார்கள். இதில் கிடைக்கும் லாபத்தை புற்றுநோய் சிகிச்சைக்கு நன்கொடையாக அளிக்கின்றனர்.
இதுவரை, நிதி உதவி தேவைப்படும் 34 பெண்களுக்காக 33,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்து மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.
சிகிச்சை மையத்திலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் நோயாளிகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் இருப்பதை சாகின்பேவா உணர்ந்தார், அதனால் அவர்கள் தங்குவதற்கு அருகிலேயே லாப நோக்கற்ற விடுதியை நிறுவ உதவினார்.
எழுத்தாளர்
1990-ல் வெளியான தன்னுடைய முதல் நாவலான, காற்றில் வரும் காதலின் பாடல் மூலம் மொசாம்பிக்கின் முதல் பெண் நாவலாசிரியானார் இவர்.
மொசாம்பிக்கின் தலைநகர் மபுடோவின் புறநகர்ப் பகுதியில் வளர்ந்த சிசியான் கத்தோலிக்கப் பள்ளியில் போர்ச்சுகீசிய மொழியைக் கற்றுக் கொண்டுள்ளார். எட்வர்டோ மாண்ட்லேன் பல்கலைக்கழகத்தில் மொழிகள் துறையில் படித்த இவர் அதில் பட்டம் பெறவில்லை.
ஆங்கிலம்,ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இவரது எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. முதல் மனைவி : பலதார மணத்தின் கதை , என்ற தனது புத்தகத்திற்காக உள்ளூர் ஜோஸ் க்ரவேரின்ஹா விருதைபெற்றுள்ளார்.
மிக சமீபத்தில் போர்ச்சுகீசிய மொழியில் எழுத்துக்கான மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படும் கேமோஸ் பரிசை வென்றுள்ளார் இவர்.
கவிஞர்
எழுத்தாளரும் அரசியல் ஆர்வலருமான டாரியா செரென்கோ, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான பெண்ணிய போர் எதிர்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாலின வன்முறை குறித்து ரஷ்யாவிலிருந்து இவர் எழுதி வருகிறார், மேலும் பெண்ணியம் மற்றும் போர் எதிர்ப்பு உரை குறித்து இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
பிக்கெட் கலை முயற்சியை உருவாக்கிய செரென்கோ, இந்த முன்னெடுப்பின் மூலமாக பிரச்னைகள் குறித்து பொறிக்கப்பட்ட இலச்சினைகளை அணிந்து விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார்.
யுக்ரேனில் ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, செரென்கோ "தீவிரவாத" செய்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் ஜார்ஜியாவுக்கு குடிபெயர்ந்த உடனேயே, இப்போது ரஷ்ய அதிகாரிகளால் "வெளிநாட்டு உளவாளி" என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எழுத்தாளர்
புனைவு, கவிதைகள் மற்றும் அபுனைவு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள ஆசிரியரான ஒக்ஸானா ஜபுஷ்கோ உக்ரைனின் மிக முக்கிய எழுத்தாளர் மற்றும் அறிவுஜீவியாக கருதப்படுகிறார்.
இவரது உக்ரேனிய பாலினம் குறித்த களப்பணி மற்றும் கைவிடப்பட்ட ரகசியங்களின் அருங்காட்சியகம் என்ற புத்தகங்களுக்காக சர்வதேச அளவில் இவர் அறியப்படுகிறார்.
இவர் கீவில் உள்ள ஷெவ்செங்கோ பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையில் பட்டம் பெற்றுள்ளார் மற்றும் கலை தத்துவத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
20க்கும் மேற்பட்ட இவரது புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இது ஏஞ்சலஸ் மத்திய ஐரோப்பிய இலக்கியப் பரிசு, உக்ரைனின் ஷெவ்செங்கோ தேசியப் பரிசு மற்றும் ஃபிரெஞ்சு நேஷனல் ஆர்டர் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர் விருது உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேசிய அளவிலான விருதுகளை இவருக்கு பெற்று தந்துள்ளது.
கலைஞர்
அச்சு தயாரித்தல், வரைதல், ஓவியம், நிறுவல் (Installation)மற்றும் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் பணிபுரியும் சிலா குமாரி பர்மன், பிரதிநிதித்துவம், பாலினம் மற்றும் கலாச்சார அடையாளம் போன்ற பிரச்னைகளைப் பற்றிய விவாதங்களை தனது படைப்புகள் மூலம் ஏற்படுத்துகிறார்.
இந்த ஆண்டு சிலா குமாரியின் படைப்புகள் 1879 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடந்துவரும் ஒரு விளக்கு திருவிழாவான பிளாக்பூல் இல்லுமினேஷன்ஸில் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த படைப்பான, "Lollies In Love with light" என்பது ஐஸ்கிரீம் வேனை மையமாக வைத்து பனிக்கட்டியால் ஈர்க்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப நிறுவலாகும். இது அவரது பெற்றோர் நடத்திய ஐஸ்கிரீம் வியாபாரத்தின் மூலம் ஈர்க்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டில், சிலா குமாரி, டேட் பிரிட்டனின் முகப்பில் இந்திய புராணங்கள், பிரபலமான கலாச்சாரம் மற்றும் பெண் அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் ரிமெம்பிங் எ பிரேவ் நியூ வேர்ல்ட் எனும் நிறுவலை செய்தார்.
கடந்த ஆண்டு அவருக்கு எம்பிஇ பட்டம் வழங்கப்பட்டது.
பிக்சுனி, பௌத்த மதத் துறவி
1940களில் இங்கிலாந்தில் பிறந்த ஜெட்சுன்மா டென்ஸின் பல்மோ வளரிளம் பருவத்தில் பௌத்த மதத்தை தழுவினார்.
20 வயதில் இந்தியா வந்த அவர், திபெத் பௌத்த துறவியாக நியமிக்கப்பட்ட முதல் மேற்கத்திய நபரானார்.
பெண் பயிற்சியாளர்களின் நிலையை உயர்த்த, இந்தியாவில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் டோங்யூ கட்சாய் லிங் துறவிகள் மடத்தை டென்ஸின் பல்மோ நிறுவினார். அங்கே தற்போது 120 துறவிகள் இருக்கிறார்கள்.
இமயமலையில் உள்ள தொலைதூர குகையில் 12 ஆண்டுகளை இவர் கழித்துள்ளார். அதில் 3 ஆண்டுகள் கடுமையான தியானம் மேற்கொண்டுள்ளார். 2008-ம் ஆண்டு மதிப்பிற்குரிய மாஸ்டர் என்று பொருள்படும் ஜெட்சுன்மா என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
கலைஞர்
பெண்கள் புகைப்படம் இல்லாத பத்திரிகை அட்டை என்பது கலைஞரான லாலா பாஸ்குனெல்லியின் மூளையில் பிறந்த ஐடியாவாகும். இது 2015 இல் நிறுவப்பட்டது, இது அழகு ஸ்டீரியோடைப்கள், ஊடகங்கள் மற்றும் பிரபலமான கலாசாரத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கேள்விக்குள்ளாக்கியது.
முதுமை மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் உட்பட, தங்கள் உடலைச் சுற்றி கட்டமைக்கப்படும் கதைகளை மறுபரிசீலனை செய்ய பெண்களை அழைக்கும் வைரல் நிகழ்ச்சியை நடத்தினார். அவர்களின் சமீபத்திய நடவடிக்கைக்கான அழைப்பு #HermanaSoltaLaPanza (சகோதரி, உங்கள் வயிற்றில் உறிஞ்சுவதை நிறுத்துங்கள்) வெவ்வேறு வடிவங்கள் கொண்ட மக்களின் உண்மையான கதைகளை எடுத்துக்காட்டியது.
வழக்கறிஞர், கவிஞர், லெஸ்பியன் மற்றும் பெண்ணிய ஆர்வலரான பாஸ்குனெல்லி, "வகுப்பு, பாலியல் மற்றும் இனவெறி" மற்றும் பாலின சமத்துவமின்மையை மேலும் தூண்டும் ஒரே மாதிரியான பெண்பால் அழகு லட்சியங்களை மாற்றும் வேலையை செய்து வருகிறார்.
மீன் வியாபாரி
கடல் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்ட கானா கிராமமான ஃபுவேமைப் பூர்வீகமாகக் கொண்ட எசி புயோபாசா காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நேரடியாக எதிர்கொண்டவர்.
கடல் மட்டம் உயர்ந்ததால், அவரின் சொந்த நிலம் வாழத் தகுதியற்றதாக மாற்றியது. இதனால் அவரது கணவர் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் புலம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு இவர் தள்ளப்பட்டார்.
அவரது சொந்த கிராமத்தில் ஒரு முன்னணி மீன் வியாபாரியாக இருந்த புயோபாசா மற்றும் அவரது சகாக்களின் வருமானம் கடல் அரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள மீனவப் பெண்களுக்கு உதவுவதற்காக ஒரு சங்கத்தை அமைத்தனர்.
இப்போது இந்த சங்கம் சுமார் 100 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் ஒவ்வொரு வாரமும் கூடி, வணிகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறது. மேலும் தேவை ஏற்படும் குடும்பங்களுக்கு ஆதரவாக பண உதவியும் வழங்குகிறது.
ஒவ்வொரு முறை அலைகள் வரும்போதும் விரக்தியடைகிறோம். நம்மையும், நமது அடுத்த தலைமுறையையும் நோக்கி மரணம் வருகிறது.
எசி புயோபாசா
கிளைமேட் கஃபே நிறுவனர்
கிளைமேட் கஃபே என்பது ஒரு பொது இடமாகும். அங்கு மக்கள் ஒன்று கூடி குடிப்பதற்கும், அரட்டை அடிப்பதற்கும், காலநிலை மாற்றத்தில் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இந்த இடம் உருவாக்கப்பட்டது. ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயர் கிராமத்தில் 2015இல் ஜெஸ் பெப்பர் என்பவரால் இந்த கஃபே முதலில் நிறுவப்பட்டது.
உலகம் முழுவதும் இதுபோல பல இடங்களை உருவாக்கி தொடர்புகளை விரிவுபடுத்தவும் ஜெஸ் பெப்பர் தனது ஆதரவை வழங்கி வருகிறார்.
காலநிலை நெருக்கடி குறித்த தங்கள் அச்சங்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய பாதுகாப்பான இடங்கள் இவை என்று இதன் பங்கேற்பாளர்கள் கூறுகிறார்கள்.
ராயல் ஸ்காட்டிஷ் புவியியல் சங்கத்தின் கெளரவ உறுப்பினர் மற்றும் ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸின் உறுப்பினர் ஜெஸ் பெப்பர் காலநிலை மாற்றம் குறித்த தளத்தில் பல தலைமைப் பாத்திரங்களை வகிக்கிறார்.
சமூகத்தில் நிகழும் காலநிலை நடவடிக்கை மற்றும் நேர்மறையான மாற்றம் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளால் வழிநடத்தப்படுகிறது. புதிய தொடர்புகள் நமக்கு ஊக்கமளிக்கிறது மற்றும் மாற்றத்தை விளக்குகிறது.
ஜெஸ் பெப்பர்
பத்திரிக்கையாளர்
தன்னுடைய 20 வயதில் தனக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்த போது கரோலினா டியாஸ் பிமென்டெல், தான் ஒரு நியூரோடைவர்ஜெண்ட் என்ற உண்மையை தெரிந்து கொண்டதற்காக அவரே சுயமாக கேக் செய்து கொண்டாடினாராம்.
தற்போது தனது 30 வயதில் "ப்ரவுட்லி ஆர்டிஸ்டிக்" நரம்பியல் மற்றும் மனநலம் சார்ந்த நிபுணத்துவம் பெற்ற பத்திரிக்கையாளராக செயல்பட்டு வருகிறார்.
மனநல பாதிப்புகள் உடையவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர டியாஸ் பணியாற்றி வருகிறார். மேலும் இவர், மாஸ் கியூ பைபோலார் (மோர் தென் பைபோலார்), பெருவியன் நியூரோடைவர்ஜென்ட் கூட்டமைப்பு மற்றும் புரோயெக்டோ அடிபிகோ (ப்ராஜெக்ட் ஏடிப்பிக்கல்) உள்ளிட்ட நரம்பியல் பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல திட்டங்கள் அல்லது இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் நிறுவனரும் ஆவார்.
இவருக்கு புலிட்சர் மையத்தின் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் ரோசலின் கார்ட்டர் அறிஞராகவும் திகழ்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர்
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது இரண்டு பக்கவாதங்களில் இருந்து தப்பிய மரிஹெத்தா மொஹாசெவிச்சின் வாழ்க்கை அதற்கு பிறகு வியத்தகு முறையில் மாறியது.
உடல் மற்றும் உளவியல் விளைவுகளை அனுபவித்து, அவர் இன்றும் வாழ்ந்து வருகிறார். மொஹாசெவிச் இப்போது இளைஞர் ஆலோசகராகவும், ஊடற்குறைபாடு உரிமை ஆர்வலராகவும் பணியாற்றுகிறார்.
நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்கள் பற்றிய தவறான எண்ணங்கள் மற்றும் அணுகுமுறைகளை எதிர்க்க அவர் தனது குரலைப் பயன்படுத்துகிறார்.
உடற்குறைபாடு குறித்த தனது சொந்த அனுபவங்களை வைத்து, 'குறைபாட்டுடனான வாழ்வு' என்ற வகுப்பை அவர் வடிவமைத்துள்ளார்.
நரம்பியல் பாதிப்புகளை உலகளாவிய பொது சுகாதார முன்னுரிமையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னெடுப்பான ஒன் நியூராலஜியின் தூதராக மரிஹெத்தா உள்ளார்.
லாரி ஓட்டுநர்
லாரி டிரைவரான கிளாரா எலிசபெத், ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் லாரி தொழிலில் 17 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். லாரி ஓட்டுநரான கிளாரா, மெக்சிகோ முழுவதும் நாட்டின் மிக ஆபத்தான சாலைகளில் பயணம் செய்து வருகிறார்.
மெக்சிகோவின் டுராங்கோ பகுதியைச் சேர்ந்தவரான கிளாரா, 17 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நான்கு குழந்தைகளும், ஏழு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
ஒரு 'டிரெய்லரா'வாக (மெக்சிகோவில் பெண் லாரி ஒட்டுநர்களை அழைக்கும் பொதுவான பெயர்) மெக்சிகோ மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பொருட்களை விநியோகம் செய்வதற்காக தனது வாழ்க்கையை சாலையில் செலவிடுகிறார் கிளாரா.
லாரி ஓட்டுநர் பணியோடு சேர்த்து இளம் ஓட்டுனர்களுக்கும் சாலையில் லாரியை இயக்க பயிற்சி அளித்துவருகிறார் கிளாரா. மேலும் அதிக பாரத்தை ஏற்றிச் செல்லும் பெரிய லாரிகளை இயக்கும் தொழிலில் பாலின சமத்துவத்தை நிறுவும் நோக்கத்துடன், இத்துறைக்கு அதிக பெண்கள் வருவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் இவர் எடுத்து வருகிறார்.
பழங்குடியின உரிமைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வழக்கறிஞர்
காய் தாஹூ பழங்குடி மற்றும் மாற்றுத்திறனாளியான இவர், ஒரு காலநிலை நிபுணர். கேரா ஷெர்வுட் நியூசிலாந்தின் தெற்கு தீவான டே வைபவுனாமு பகுதியைச் சேர்ந்தவர்.
இவர், காலநிலை நீதி மற்றும் சமூக மாற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற சமூக தாக்க நிறுவனமான 'ஆக்டிவேட்'-இன் இணை நிறுவனர் ஆவார்.
இவரது நடைமுறை நிலம் மற்றும் மூதாதையர்களுக்கான மவுரி அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்த அணுகுமுறை சமீபகாலம் வரை முக்கிய காலநிலை உரையாடல்களில் புறக்கணிக்கப்பட்டிருந்தது.
ஷெர்வுட்-ஓ'ரீகன் தனது சமூகங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை முன்னிலைப்படுத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பரந்த சிவில் சமூகத்துடன் உறவுகளை உருவாக்கியுள்ளார், அதே நேரத்தில் காலநிலை பேச்சுவார்த்தைகளில் பழங்குடி மக்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களின் உரிமைகளை அதிக அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அதீத விழிப்புணர்வு மாதிரியை நாங்கள் நிராகரிக்கிறோம், எங்களுக்கான இடத்தை நாங்களே பிடிப்போம், அதில் எங்கள் சமூகத்தை வழிநடத்துகிறோம், அது செயல்படுகிறது. பூர்வீகுடிகளை உள்ளடிக்கிய தீர்வுகளை பின்பற்றுவதே காலநிலை நெருக்கடிக்கு தீர்வாகும் என்பதை பலர் இப்போது உணர்ந்துள்ளனர் என்று நினைக்கிறேன்.
கேரா ஷெர்வுட்-ஓ'ரீகன்
கல்வியாளர் மற்றும் காலநிலை ஆலோசகர்
காலநிலை மாற்றம் குறித்த கல்வியை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று இளம்பெண் சகாரிகா ஸ்ரீராம் போராடி வருகிறார்.
இதற்காக அவரது மென்பொருள் திறன்களைப் பயன்படுத்தி, ஆன்லைன் தளமான Kids4abetterworld-ஐ உருவாக்கியுள்ளார். இது உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு காலநிலை மாற்றம் குறித்த புரிதலையும், நீடித்த வளர்ச்சியை நோக்கிய திட்டங்களின் மாதிரியையும் புரிய வைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவர் சூழல் சார்ந்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் மூலமாக காலநிலை மாற்றத்தின் மீது நேர்மறையான தாக்கத்தை எப்படி ஏற்படுத்துவது என்று குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறார்.
துபாயில் படிப்பை தொடர்ந்து வரும் சகாரிகா, ஐ.நா குழந்தைகளின் உரிமைகள் குழுவின் குழந்தைகள் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த பார்வைகளை இளம் வயதினருக்கு எடுத்துச்செல்வது குறித்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
இது எச்சரிக்கும் நேரம் அல்ல, மாறாக செயல்பட வேண்டிய நேரம். எனவே ஒவ்வொரு குழந்தைக்கும் நிலையாக வாழவும், நம் உலகில் நாம் காண விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ளவும் கற்பிக்க வேண்டும்.
சகாரிகா ஸ்ரீராம்
விவசாயி மற்றும் தொழிலதிபர்
2016 ஆம் ஆண்டில், நாக்-டென் சூறாவளியால் பிலிப்பைன்ஸின் கேமரைன்ஸ் சுர் பகுதி பாதிக்கப்பட்டு 80% விவசாய நிலங்கள் அழிவுக்குள்ளாகின.
தி கொக்கோ என்ற திட்டத்தை நிறுவி, சூறாவளியின் பாதிப்புகளில் இருந்து மீளும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் லூயிஸ். வளங்குன்றா வேளாண் காடுகளை நிறுவி, உள்ளூர் உணவு முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மாபுலோ, விவசாயிகளுக்கு அதிகாரமளித்து, அழிவுகரமான உணவு முறைகளை மாற்றுகிறார். மேலும் கிராமப்புறங்களை தலைமையாக கொண்டு பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்கி, நிலத்தை பயிரிடுபவர்களின் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.
அவர் சர்வதேச காலநிலை கொள்கைக்கு ஆலோசனை வழங்குகிறார். அதில் கிராமத்தின் கதைகளை, அறிவையும் கொண்டு சேர்க்கிறார். அவர் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் பூமியின் இளம் சாம்பியனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
உலகெங்கிலும் என்னைப் போன்றவர்களால் பல இயக்கங்கள்கட்டமைக்கப்படுகின்றன, பசுமையான நிலப்பரப்புகளுடனான எதிர்காலத்தை கட்டமைக்கும் பாதையில் முன்னேறுகின்றனர். மேலும் உள்ளூர் சமூகங்களை இணைத்து, நமக்கு தேவையான உணவு கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.
லூயிஸ் மாபுலோ
திரைக்கதை எழுத்தாளர்
விருதுபெற்ற எழுத்தாளர், இல்லுஸ்ட்ரேட்டர் மற்றும் திரைக்கதை எழுத்தாளாரான ஆலிஸ் ஓஸ்மன் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக விற்பனையாகி வரும் கிராஃபிக் நாவலான ஹார்ட்ஸ்டாப்பரை உருவாக்கியவர். மேலும் அவர் நெட்பிளிக்சுக்காக LGBTQ + கமிங்-ஆஃப்-ஏஜ் ஸ்டோரியை எம்மி விருது பெற்ற தொலைக்காட்சி தழுவலாக மாற்றியுள்ளார்.
ஓஸ்மன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியது மட்டுமின்றி, அதன் இசை முதல் நடிகர்கள் தேர்வு வரை ஒவ்வொரு பகுதியிலும் பணிபுரிந்துள்ளார்.
அவர் தன்னுடைய 19 வயதில் இருக்கும்போது வெளியான ரேடியோ சைலன்ஸ் , லவ்லஸ் மற்றும் சாலிடர் உள்ளிட்ட இளையோருக்கான பல நாவல்களை இவர் எழுதியுள்ளார்.
ஒய்ஏ புக் பரிசு, இன்கி விருதுகள், கார்னெகி மெடல் மற்றும் குட்ரீட்ஸ் சாய்ஸ் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் இவர். மேலும் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.
நடிகை
பொழுதுபோக்கு உலகில் உடனடியாக அடையாளம் காணக்கூடிய முகம், விருது பெற்ற நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என அமெரிக்கா ஃபெரெராவுக்கு பல முகங்கள் உள்ளன. சமீபத்திய சாதனைப் படமான பார்பி, ரியல் வுமன் ஹேவ் கர்வ்ஸ் மற்றும் ஹிட் சீரிஸ் அக்லி பெட்டி உட்பட பல கதாபாத்திரங்களுக்காக இவர் அறியப்படுகிறார்.
அக்லி பெட்டியில் நடித்ததற்காக மிக இளம் வயதிலேயே முன்னணி நடிகை பிரிவில் எம்மி விருதை இவர் வென்றுள்ளார். இதை வெல்லும் முதல் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை இவராவர், நீண்ட கால ஆர்வலரான ஃபெரெரா, பெண்களின் உரிமை மற்றும் பெண்களுக்கு திரையில் அதிக பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பல முறை உரை நிகழ்த்தியிருக்கிறார்.
இவரின் பெற்றோர்கள் ஹோண்டுரானிலிருந்து குடியேறியவர்கள். தனது தொண்டு நிறுவனமான பொடெரிஸ்டாஸ் மூலம் அமெரிக்காவில் லத்தீன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பிரசாரம் செய்து வருகிறார்.
நகைச்சுவை கலைஞர்
கிரீன்வாஷிங் காமெடி கிளப் என்பது சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் பெண்ணியம், வறுமை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் LGBTQ+ உரிமைகள் போன்றவற்றைக் கையாளும் ஒரு நகைச்சுவை குழு.
இந்தக் குழுவை ஆனே கிரால் நிறுவினார். இவர் தனது பஞ்ச் டயலாக் மூலமாக மக்களின் மனதில் மாற்றத்தின் விதைகளை விதைக்க முடியும் என்றும், அவர்களின் பழக்கவழக்கங்களில் தாக்கத்தை உருவாக்கமுடியும் என்று நம்புகிறார்.
பொழுதுபோக்கினால் உந்தப்பட்ட ஒரு சமூகத்தில், சுருக்கமான கருத்துக்கள் மற்றும் குறுந்தகவல்கள் அதிக தாக்கத்தை உருவாக்குகின்றன. சற்று மிகைப்படுத்தல் மற்று பஞ்ச டயலாக்கை பயன்படுத்தி நகைச்சுவையின் வழியாக காலநிலை மாற்றம் குறித்த கருத்துகளை பகிர்ந்துகொள்ள முடியும் என்று கிரால் நம்புகிறார்.
கிரீன்வாஷிங் காமெடி கிளப்பின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, ஏனெனில் இன்று பலர் காலநிலை மாற்றத்தைப் பற்றி அக்கறை கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் ஒன்றிணைந்து, சிரிக்கிறார்கள், மேலும் சண்டையைத் தொடரத் தயாராக இருப்பதை இது குறிக்கிறது!
ஆனே கிரால்
கிரிக்கெட் வீராங்கனை
இந்த வருடத்திற்கான விஸ்டனின் ஐந்து கிரிக்கெட் வீராங்கனைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஹர்மன்ப்ரீத். இந்த பட்டியலில் இடம்பெறும் முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் ஹர்மன்ப்ரீத் ஆவார்.
இந்திய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து உள்நாடு மட்மின்றி வெளிநாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் தனது அணியை வழிநடத்தி சில்வர் மெடல் வாங்குவதற்கு காரணமாக அமைந்தவர்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி மார்ச் மாதம் நடைபெற்ற முதல் பெண்கள் ப்ரீமியர் லீக் போட்டியிலேயே வெற்றிபெற செய்தவர்.
2017ம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 115 பந்துகளுக்கு 171 ரன்கள் குவித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியதற்கு காரணமாக அமைந்ததே இவரின் தொழில்முறை ஆட்டத்தில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
குதிரையேற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்
ஆண்டினிஸ்கா சென்சி, 30 வயதுக்கு பிறகு குதிரையேற்றம் செய்யத் தொடங்கியபோது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது குழுவுடன் பயணம் செய்வதவாறே குதிரையில் இருந்தபடியே ஜிம்னாஸ்டிக்ஸ் கலையை கற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கவில்லை.
வடக்கு இத்தாலியில் உள்ள லா ஃபெனிஸிலிருந்து வந்த அவரின் வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல. சென்சி பிறக்கும் போது அவரது தாய் எதிர்கொண்ட சிக்கலையடுத்து, 'சென்சி தனது முதல் குளிர்காலத்தை கடக்க மாட்டாள்' என்று மருத்துவர்கள் அவளின் தாயிடம் தெரிவித்திருந்தனர்.
இத்தாலியின் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சங்கம் மற்றும் லா ஃபெனிஸ் வால்டிங் குழுவால் தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக சென்சி குதிரையேற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியை தொடங்கினார்.
அவர் இப்போது உலக சாம்பியனான ஆனா கவல்லாரோ மற்றும் பயிற்சியாளர் நெல்சன் விடோனி ஆகியோருடன் பயிற்சி பெறுகிறார்.
தேர்வாளர் மற்றும் கலாசார மேலாளர்
சாவ் பாலோவின் புறநகரில் உள்ள ஏழ்மையான சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு காமிக் புத்தக மாநாட்டில் கலந்து கொண்டு தான் பெற்ற அனுபவத்தை பிறரிடம் பகிரும் முயற்சியாக ஆண்ட்ரேசா டெல்கடோ PerifaCon-ஐ அறிமுகப்படுத்தினார்.
இந்த இலவச நிகழ்வானது, பொதுவாக கலாசார நுகர்வோர் அல்லது படைப்பாளிகள் என கவனிக்கப்படாத பிரேசிலிய ஃபாவேலாக்களை சேர்ந்த நகைச்சுவை ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்கள் மீது கவனம் செலுத்த ஒரு தளமாக உதவுகிறது.
காமிக் புத்தகங்கள், வீடியோ கேம்கள், கச்சேரிகள் மற்றும் பிற "ஜீக் கலாசாரம்" அம்சங்களுடன், மூன்றாவது PerifaCon 2023 இல் நடந்தது,. இதில் 15,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
யூடியூபர் மற்றும் போட்காஸ்டராக தனது தளங்களைப் பயன்படுத்தி டெல்கடோ, பிரேசிலில் கலாசாரத்திற்கான அணுகலை ஜனநாயகப்படுத்துவது குறித்து குரல் கொடுத்து வருகிறார், குறிப்பாக கறுப்பின கலைஞர்களின் வேலைகளில் கவனம் செலுத்துகிறார்.
ஃபிரீடைவிங் பயிற்சியாளர்
தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின பெண் டைவிங் பயிற்சியாளரான ஜாண்டில், கடல் இன்னும் பரந்துபட்ட மக்களுக்கு சென்று சேர விரும்புகிறார்.
இவர் நிறுவியுள்ள பிளாக் மெர்மெய்ட் அறக்கட்டளை, இளைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை கடலுக்கு அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இந்த இந்த குழுக்களை தொழில்முறை கலைஞர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும், பொழுதுபோக்காகவும் பயன்படுத்த முடியும் என்று ஜாண்டில் நம்புகிறார்.
இதுமட்டுமின்றி கடல் ஆய்வாளர், கதைசொல்லி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என ஜாண்டில் பன்முகம் கொண்டவர். கடல் மாசுபாடு மற்றும் கடல் மட்டம் உயர்வதைப் குறித்து இளைய சமூதாயத்தினர் அறிந்து கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது திறமைகளை பயன்படுத்தி வருகிறார்.
பருவநிலை நெருக்கடியை எதிர்கொண்டு வரும் காலத்தில், சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க நினைக்கும் இளம் குரல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.
ஜாண்டில் தலோவு
வேகமாக ஏறும் வீராங்கனை
பாலியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது, தேசாக் மேட் ரீட்டா குசுமா தேவி ஒரு சுவர் ஏறும் போட்டிக்கு அழைக்கப்பட்டார்.அது அவருக்குள் வேகம் ஏறுவதில் ஈர்ப்பை உண்டாக்கியது.
இவர் ஆரம்பத்தில் இளைஞர்களுக்கான வேகமாக ஏறும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற ஆரம்பித்தார். இதனால் "இந்தோனீசிய ராக் க்ளைம்பிங் ராணி" என அழைக்கப்படும் குசுமா தேவி இந்த ஆண்டு புதிய உயரத்தை எட்டினார். 2023 ஐஎஃப்எஸ்சி க்ளைம்பிங் உலக சாம்பியன்ஷிப்பில் பெண்கள் பிரிவில் 6.49 வினாடிகளிலில் ஏறி சாதனை படைத்து தங்கம் வென்றார்.
இதன் மூலம் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் விளையாட அவர் தகுதி பெற்றுள்ளார். அங்கு முதல்முறையாக வேகம் ஏறுதல் போட்டி ஒரு தனி நிகழ்வாக இம்முறை இடம்பெறுகிறது.
இதுவரை பூப்பந்து, பளுதூக்குதல் மற்றும் வில்வித்தையில் மட்டுமே ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றுள்ள இந்தோனீசியாவின் வரலாற்றை தேசாக் மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி ஜே மற்றும் இசை தயாரிப்பாளர்
கடந்த ஆண்டு இரானில் போராட்டம் வெடிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, இரானிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களுக்கு விதிக்கப்படும் கலாசாரக் கட்டுப்பாடுகளை DJ பரமிடா மீறியிருந்தார்.
இப்போது பெர்லினில் வசிக்கும் பரமிடா, ஃபிராங்ஃபர்ட் மற்றும் தெஹ்ரானில் தனது பதின்ம வயதில் வாழ்ந்தபோதே, இசை மற்றும் நடன கலாசாரத்தின் மீது தனக்கிருக்கும் ஆர்வத்தை கண்டுபிடித்தார்.
புகழ்பெற்ற நடன இசை வரலாற்றால் ஈர்க்கப்பட்டு உருவான, அவரது இசை தயாரிப்பான 'லவ் ஆன் தி ராக்ஸ்' வெளிநாட்டவர் நடனக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது.
பெர்லினில் உள்ள பெர்கெய்னின் பனோரமா பாரில் வசித்த பரமிடா, இன்று உலகளவில் அதிகம் விரும்பப்படும் DJ மற்றும் சிறந்த இசை தயாரிப்பாளராக மாறியுள்ளார். ஆணாதிக்கம் நிறைந்த இசை மற்றும் இரவு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பாலின சமத்துவத்தை நிறுவ அவர் விரும்புகிறார்.
கால்பந்து வீராங்கனை
கேடலோனியாவில் பிறந்த நடுகள வீராங்கனையான ஐடானா பான்மடி இந்த ஆண்டு தனது பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி ஸ்பானிஷ் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் இரண்டையும் வென்றார்.
ஆனால் உலகக் கோப்பையின் போதுதான் அவர் உலகளாவிய சூப்பர் ஸ்டாராக ஆனார். அவர் ஸ்பெயினின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மூன்று கோல்களை அடித்து, போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 25 வயதில், அவர் மதிப்புமிக்க பாலோன் டி'ஆர் விருதை வென்றார். மேலும் அந்த ஆண்டின் UEFA சிறந்த வீராங்கனையாகவும் முடிசூட்டப்பட்டார்.
மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தனது குரலைப் பயன்படுத்த பயப்படாமல், பெண்களுக்கான கால்பந்தில் சமத்துவத்திற்காக பான்மடி பேசுகிறார்.
ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்புத் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ், ஜென்னி ஹெர்மோசோ என்ற வீராங்கனையை உதட்டில் முத்தமிட்டது சர்ச்சையானது. பான்மடி, தனது UEFA ஏற்பு உரையைப் பயன்படுத்தி, தனது அணித் தோழருக்கும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்ற பெண்களுக்கும் ஆதரவை திரட்டினார்.
ஒலிம்பிக் தடகள வீராங்கனை
இவர் ஹெப்டத்லான் போட்டிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் கமிலா பைரெல்லி 100 மீட்டர் தடை ஓட்டத்தில் போட்டியிட்டார்.
குவாரனி சிறுத்தை என்ற புனைப்பெயரால் அறியப்படும் இவர், தடகள போட்டிகளில் கலந்து கொண்டு பல தேசிய சாதனைகளை படைத்துள்ளார். மேலும் ஆங்கில ஆசிரியர் மற்றும் விளையாட்டு பயிற்சியாளராகவும் கமிலா உள்ளார்.
பராகுவேயில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள குடும்பத்தில் பைரெல்லி வளர்ந்தார். அங்கு அவர் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நெருக்கமாகக் கண்டார்.
அவர் இப்போது ஒரு சூழல் தடகள (EcoAthlete) சாம்பியனாக இருக்கிறார். அதாவது காலநிலை மாற்றத்தைப் பற்றி பேசுவதற்கும் கார்பன் உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கும் மக்களை ஊக்குவிப்பதற்காக அவர் தனது விளையாட்டு உலகத்தை பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார்.
காட்டு விலங்குகளைப் பார்ப்பது அன்றாட நிகழ்வாக இருக்கும் ஊரில் நான் வளர்ந்தேன். காலநிலை மாற்றத்தால் அந்த விலங்குகள் இப்போது பாதிக்கப்படுவதை அறிந்து எனக்கு கவலை ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய நாம் அவைகளுக்கு உதவ வேண்டும்.
கமிலா பைரெல்லி
நடிகை
இந்திய நடிகையான தியா மிர்சா, சினிமாவில் தனது பாத்திரங்களுக்காக விருதுகளை வென்றது மட்டுமல்லாமல், ஏராளமான சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமான திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட நல்லெண்ண தூதராக உள்ள தியா மிர்சா காலநிலை மாற்றம், சுகாதாரமான காற்று மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார்.
ஒன் இந்தியா ஸ்டோரிஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, தாக்கத்தை உருவாக்கும் நம்பிக்கை கதைகளை அவர்களின் சொந்த மொழியிலேயே பேச வைத்து உருவாக்கி வருகிறார்.
சேவ் தி சில்ட்ரன், விலங்கு நலனுக்கான சர்வதேச நிதியம் அமைப்புகளின் தூதுவராகவும், சரணாலயம் இயற்கை அறக்கட்டளையின் குழு உறுப்பினராகவும் இவர் உள்ளார்.
சைகை மொழி கலைஞர்
உலகில் அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான பிப்ரவரி சூப்பர் பவுல் LVII இல், ஜஸ்டினா மைல்ஸ் சரித்திரம் படைத்தார்.
காது கேளாத கலைஞரான இவர், பாப் ஐகானான ரிஹானாவின் பாடல் ஒன்றை சைகை மொழியில் நிகழ்த்தி காட்டியதன் மூலமாக வைரலானார்.
இதன்மூலம் சூப்பர் பவுலின் மதிப்புமிக்க நிகழ்ச்சியில், அமெரிக்க சைகை மொழியை (ஏஎஸ்எல்) நிகழ்த்திய முதல் காதுகேளாத பெண்மணி ஆனார். இதற்கு முன்பு பிளாக் நேஷனல் கீதம் என அழைக்கப்படும் சிங் மற்றும் லிஃப்ட் எவரி வாய்ஸ் ஆகிய பாடல்களையும் அமெரிக்க சைகை மொழியில் இவர் பெர்ஃபார்ம் செய்திருந்தார்.
மைல்ஸ் காது கேளாதவர்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை உலகிற்கு காட்ட விரும்புகிறார், மேலும் காது கேளாத செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறார்.
Kpop4Planet இசைக்குழுவின் நிறுவனர்
Kpop4Planet மூலம், டேயோன் லீ காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள உலகம் முழுவதும் உள்ள K-pop இசை ரசிகர்களை ஒன்று திரட்டுகிறார்.
2021இல் தொடங்கப்பட்ட இந்தக் குழு, தென் கொரியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இசை நிறுவனங்களின் செல்வாக்கு மிக்க நபர்களிடம் காலநிலை தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறவும் கேட்டுக்கொண்டு வருகிறது.
இசைத்தட்டுகளில் கழிவுகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்கங்களை இக்குழு எடுத்துக்காட்டியது. இது கே-பாப்பில் உள்ள பிற சிறிய நபர்கள் முதல் கே-பாப் துறையின் முன்னோடிகள் வரை பலரையும் டிஜிட்டல் ஆல்பங்களை நோக்கிச் செல்ல தூண்டியது.
டேயோன் லீ இப்போது இசைத்துறையை கடந்து, ஆடம்பர ஃபேஷன் பிராண்டுகளை காலநிலை உறுதிமொழிகளை ஏற்க வலியுறுத்தி வருகிறார். இந்த ஆடம்பர பிராண்டுகள் பெரும்பாலும் K-pop பிரபலங்களை அவர்களின் அடையாளமாக கொண்டு செயல்படுகிறது.
சமூக நீதிக்காக நாம் போராடுகிறோம், மாற்றத்தை உருவாக்கும் வரை நாம் பின்வாங்கமாட்டோம். இதை நாங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளோம், மேலும் அதை தொடர்ந்து செய்வோம், காலநிலை நெருக்கடிக்கு எதிராக போராடுவோம்.
டேயோன் லீ
நடிகை
ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு மியான்மரில் நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கைன் ஹ்னின் வய், சான் யே எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.அவர் பர்மிய சினிமாவில் மிகவும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவரானார்.
இருப்பினும், அவர் இப்போது தனது தொண்டு நடவடிக்கைகளுக்காக நன்கு அறியப்படுகிறார். 2014 ஆம் ஆண்டில், பெற்றோர் இல்லாத மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பது உட்பட பல்வேறு செயல்பாடுகளை ஆதரிக்கும் ஒரு தொண்டு நிறுவனமான கைன் ஹினின் வய் அறக்கட்டளையை அவர் நிறுவினார்.
தனது பணியின் மூலம், பல்வேறு காரணங்களால் பெற்றோரின் ஆதரவு இல்லாத கிட்டத்தட்ட 100 குழந்தைகளை அவர் தற்போது கவனித்து வருகிறார்.
குழந்தை கடத்தலைத் தடுப்பதற்கான தூதராகவும் ஹினின் வய் பணியாற்றுகிறார்.
தடகள வீராங்கனை
ஐரோப்பிய மற்றும் காமன்வெல்த் 4*100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவரான பியான்கா வில்லியம்ஸ், 2023-ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
கடந்த ஜூலையில் ஐக்கிய ராஜ்ஜியம் தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாவதாக வந்ததன் மூலம் புதாபெஸ்ட் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார்.
அவரும், அவரது வாழ்க்கைத் துணையும் சக தடகள வீரருமான ரிகார்டோ டாஸ் சான்டோசும் லண்டனில் 2020-ம் ஆண்டு ஜூலையில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டனர்.
காவல்துறையினர் இன பாகுபாட்டுடன் நடந்து கொண்டதாக வில்லியம்சும், டாஸ் சான்டோசும் புகார் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 2 அதிகாரிகளின் தவறான நடத்தை உறுதி செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தடகள வீராங்கனை
நாட்டின் 100 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்து "வரலாற்றில் அதிவேகமான லெபனிய பெண்" என்று கொண்டாடப்பட்ட அசிசா ஸ்பைட்டி இந்தாண்டு நடைபெற்ற மேற்கு ஆசிய மற்றும் அரபு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் கறுப்பின லெபனியர் என்பதற்காக மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்.
லைபீரிய தாய் மற்றும் லெபனான் தந்தைக்கு பிறந்த இவர், 11 வயதில் லெபனானுக்கு குடிபெயர்ந்தார். அங்குதான் அவர் இனவெறி மற்றும் நிற அடிப்படையிலான வகுப்புவாதத்தை எதிர்கொண்டார்.
தடகள விளையாட்டே இவருக்கு தன்னை தானே அறிந்து கொள்ளவும், இவரது முன்னேற்றம் மற்றும் தனக்காக பேசுவதற்கான உறுதியை உருவாக்கவும் பாதையாய் அமைந்தது.
தனது இடத்தை பயன்படுத்தி நாட்டில் நிலவும் அமைப்புரீதியான இனவெறி குறித்து பேசுதல், சாம்பியன் இன்க்ளூசிவிட்டி மற்றும் சமத்துவம் குறித்தும் பேசி வருகிறார். மேலும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களோடு இணைந்து லெபனிய இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி வருகிறார்.
தொலைக்காட்சி பிரபலம்
ஜார்ஜியா ஹாரிசன், புகைப்படத்தின் அடிப்படையிலான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறையைச் சமாளிக்கவும், ஒப்புதல் குறித்து இங்கிலாந்து மக்களின் பார்வையை மாற்றும் விதத்திலும் தனது கதையைப் பயன்படுத்த முடிவு செய்தார்.
லவ் ஐலேண்ட் மற்றும் தி ஒன்லி வே இஸ் எசெக்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காக அறியப்பட்ட தொலைக்காட்சி ஆளுமையான ஜார்ஜியா, ஆபாசப்படங்களை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்வதற்கு எதிராக ஆன்லைன் பாதுகாப்பை வலியுறுத்தி தொடங்கிய பரப்புரை, வழக்கு தொடரவும் உதவியாக அமைந்தது.
அனுமதியின்றி எடுக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட படங்களினால் கடுமையான விளைவுகளை ஆன்லைன் தளங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று ஹாரிசன் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு தூதர் மற்றும் காலநிலை கொள்கை
கோபன்ஹேகனில் 2009 ஐ.நா காலநிலை உச்சிமாநாட்டில் பேச்சுக்கள் நிறுத்தப்பட்டபோது, ஒரு சிக்கலைத் தீர்க்க கிறிஸ்டியானா ஃபிகரஸ் வரவழைக்கப்பட்டார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் நிர்வாகச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஃபிகரஸ், அடுத்த ஆறு ஆண்டுகளில் பகிரப்பட்ட காலநிலை திட்டத்தில் நாடுகள் ஒப்புக்கொள்வதை உறுதி செய்வதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
அவரது பணியின் ஒரு பகுதியாக, கிட்டத்தட்ட 200 கட்சிகள் மைல்கல் 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன - இது ஒரு சர்வதேச ஒப்பந்தம், தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட சராசரியான உலகளாவிய வெப்பநிலையை "மிகவும் குறைவாக" 2.0C ஆக வைத்திருக்கும் அர்ப்பணிப்பை அமைக்கிறது.
ஃபிகியூரெஸ் குளோபல் ஆப்டிமிசத்தின் இணை நிறுவனர் ஆவார், இது நடைமுறை காலநிலை தீர்வுகளை கடைப்பிடிக்க வணிகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
சில நேரங்களில் நான் துக்கத்தால் மூழ்கி, என் உணர்ச்சிகளால் செயலிழந்து, செயல்பட முடியாமல் முடங்குவேன். மற்ற நேரங்களில் நான் கோபத்தை உணர்கிறேன் மற்றும் என் உணர்ச்சிகளால் கடத்தப்படுகிறேன், எதிர்வினை பயன்முறையில் தாக்க விரும்புகிறேன். ஆனால் சிறந்த நாட்களில், நான் என் வலியையும் கோபத்தையும் பயன்படுத்தி, என் உணர்ச்சிகளின் வேரில் என்னை இணைத்துக் கொண்டு, வலிமை, அன்பு மற்றும் எதிர்பார்ப்பு மகிழ்ச்சி ஆகியவற்றால் செயல்படுவதற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பாக அவற்றை மாற்றி, நாம் அனைவரும் விரும்பும் சிறந்த உலகத்தை உருவாக்குகிறேன். எங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் சந்ததியினர்.
கிறிஸ்டியானா ஃபிகரஸ்
எப்.ஜி.எம் செயற்பாட்டாளர்
ஷம்சா அரவீலோ பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உறுதியாக செயல்பட்டு வருகிறார். அதற்காக வகுப்புகள், விழிப்புணர்வுகளை நேரடியாகவும் ஆன்லைன் வீடியோக்கள் வாயிலாகவும் செய்கிறார்.
அரவீலோ சோமாலியாவை தாயகமாக கொண்டவர். தற்போது, லண்டனில் வசித்து வருகிறார். ஆறு வயதில் பிறப்பு உறுப்பு வெட்டபட்டுள்ளது. மருத்துக் காரணங்கள் இல்லாமல் பெண்ணின் பிறப்பு உறுப்புப் பகுதியாக அல்லது முழுவதும் எடுப்பது தொடர்பாக எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்.
இவரை டிக்டாக் சமூக வலைதளத்தில் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவர்கள் அனைவரும் அறியும் வகையில் தொடர்ந்து வீடியோக்கள் வாயிலாக விழிப்புணர்வு செய்து வருகிறார். மேலும், வெளிநாடுகளில் தாக்குதலுக்கு உள்ளாகும் லண்டன் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
தற்போது, கார்டன் ஆஃப் பீஸ் என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை துவங்கி அதன் வாயிலாக லண்டன் காவல்துறையினருக்கு எப்.ஜி.எம் குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
டேனிஷ்-பஹ்ரைனைச் சேர்ந்த மனித உரிமை பரப்புரையாளரான மரியம் அல்-கவாஜா, பஹ்ரைன் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அரசியல் சீர்திருத்தத்திற்கான முன்னணி குரலாக இருக்கிறார்.
இவரது பணி மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக #FreeAlKhawaja பிரசாரத்தின் மூலம் அவரது தந்தை அப்துல்ஹாதி அல்-கவாஜாவின் விடுதலை குறித்து வாதிடுகிறார். 2011இல் பஹ்ரைனின் ஜனநாயக சார்பு போராட்டங்களில் பங்கேற்று ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அவர் ஒரு முக்கிய ஆர்வலர் ஆவார்.
அல்-கவாஜா, சிவிகஸ் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை உட்பட பல வாரியங்களில் பணியாற்றியுள்ளார். இளம் பெண்ணிய அமைப்பான FRIDA மற்றும் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் ஆகிய அமைப்பில் இவர் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் பிரசார உத்தியாளர்
அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிஷெல் ஒபாமா, பெண்கள் வாய்ப்புக் கூட்டணியின் நிறுவனர் ஆவார். இது பெண்கள் கல்வி பெறுவதை உறுதி செய்யும் உலகளாவிய அடிமட்ட அமைப்புகளை ஆதரிக்கிறது.
இது 'பெண்கள் கல்வி கற்கட்டும்', என்ற மிஷெல் ஓபாமாவின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டது. பின்பு உலகெங்கிலுமுள்ள இளம் பெண்களுக்கு கல்வியை வழங்கும் வகையில் அரசின் நடவடிக்கைகளை ஒட்டிய அணுகுமுறையை கொண்டு செயல்பட்டது.
அமெரிக்காவின் முதல் பெண்மணியாக, அவர் மூன்று முக்கிய முன்னெடுப்புகளை தொடங்கி வெற்றி பெற்றார். ஒன்று, லெட்ஸ் மூவ்! ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க பெற்றோர்களுக்கு உதவுவது. இரண்டாவது, படையில் சேர்க்க முன்னாள், இந்நாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் ஆதரவோடு ஊக்குவிப்பது, மற்றும் ரீச் ஹையர் - இதில் இன்றும் அவர் பணியை தொடர்கிறார். இது உயர்கல்வியை தொடர இளைஞர்களை ஊக்குவிக்கிறது.
வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்
1990களின் முற்பகுதியில் முன்னாள் யூகோஸ்லாவியாவில் சண்டை வெடித்ததிலிருந்து, நடாசா கண்டிச் பாலியல் வன்புணர்வு, சித்திரவதை, கொலை மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல் உள்ளிட்ட போர்க்கால அட்டூழியங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.
அவர் பெல்கிரேடில் உள்ள போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன் பல்வேறு இனக்குழுவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதியாக ஆஜர் ஆனார். மேலும் கொசாவாவை நோக்கிய செர்பியாவின் வலிமையான அரசான ஸ்லோபோடன் மிலோசெவிச்சின் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சன ரீதியாக ஆய்வு செய்த குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.
கண்டிச் ஒரு மனிதாபிமான சட்ட உதவி மையத்தின் நிறுவனர் ஆவார். மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைகளுக்காக அடிக்கடி பாராட்டப்பட்டுள்ளார்.
1,30,000 பேர் வரை இறந்த பால்கன் போர் குறித்த உண்மைகளை அறிய இவர் நிறுவிய RECOM நல்லிணக்க குழு வேலை செய்தது.
வீட்டு உரிமைக்கான செயற்பாட்டாளர்
நேபாளத்தின் பூர்வீக நியூவா தேசத்தின் உறுப்பினரும், திருநங்கை மனித உரிமை ஆர்வலருமான ருக்ஷானா கப்பாலி, அவர் வளர்ந்து வரும் போது அவரது உடல் அடையாளத்தைப் பற்றி முழுமையான தகவல் தெரியாமல் போராடினார்.
பாலினம் குறித்து அறிய சுயமாக பயின்று அறிவை வளர்த்துக் கொண்டார். டீனேஜ் வயதின் போது தான் கற்றது குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்புரை செய்து குயர் சமூகத்திற்கு ஆதரவாக வாதிடுகிறார்.
தற்போது மூன்றாம் ஆண்டு சட்டம் பயிலும் இவர், பாளத்தில் LGBTQ+ மக்களுக்கான சட்டம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஜூகி என்ற நியூவா இனத்திற்குள் வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட ஜூகி சமூகத்தைச் சேர்ந்தவரான கப்பாலி, ஜூகி மக்களை அவர்களது பாரம்பரிய வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு எதிராக போராடுகிறார்.
அரசியல் ஆர்வலர்
2002இல் இந்தோனீசியாவிடமிருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் பின்னும் கிழக்கு தைமூரை மாற்றியமைப்பதில் பெல்லா கல்ஹோஸ் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் தைமூர் -லெஸ்டே என்றும் அழைக்கப்படுகிறார்.
பல ஆண்டுகளாக நாடு கடத்தப்பட்ட இவர், தனது மக்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்து உலகம் முழுவதும் பயணம் செய்தார். கிழக்கு தைமூரின் விடுதலைக்குப் பிறகு நாடு திரும்பிய கல்ஹோஸ், வறுமையால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டில் அவர் லியூப்லோரா பசுமைப் பள்ளியைத் திறந்தார், இது வளங்குன்றா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் மாற்றத்தை விரும்பும் குழந்தைகளை ஊக்குவிக்கிறது.
கல்ஹோஸ் தற்போது கிழக்கு தைமூரின் குடியரசுத் தலைவரின் ஆலோசகராக பணியாற்றுகிறார், பெண்களின் பொருளாதார அதிகாரம் மற்றும் LGBTQ+ சமூகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.
பழங்குடிகள் உரிமை ஆர்வலர்
ஈக்வடாரின் அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் முக்கிய நபராக, அலிசியா கஹுயா இந்த ஆண்டு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார்.
ஆகஸ்டில் நடந்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில், ஈக்வடார் மக்கள் யாசுனி தேசிய பூங்காவில் உள்ள அனைத்து புதிய எண்ணெய் கிணறுகளையும் நிறுத்த வாக்களித்தனர். இதன் அர்த்தம், அரசின் எண்ணெய் நிறுவனம் பூமியின் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளும், அதிகம் தொடர்புகளை கொண்டிராத பூர்வகுடி மக்கள் வசிக்கும் இடத்தில் அதன் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதாகும்.
யாசுனியில் பிறந்து வொரானி நேசனின் (NAWE) தலைவரான காஹுய்யா, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பொதுவாக்கெடுப்புக்காக பிரசாரம் செய்து வந்தார்.
அவர் தற்போது ஈக்வடாரின் பழங்குடியின மக்களின் கூட்டமைப்பில் பெண்கள் பிரிவின் தலைவராக உள்ளார்.
காலநிலை மாற்றம் நம்மை மிகவும் வித்தியாசமாக மாற்றியுள்ளது. இதனால் எங்கள் பயிர்களை அழிக்கும் அளவுக்கு வெள்ளம் ஏற்படுகிறது. சூரியன் அதிக வெப்பத்தாலும், வறட்சியாலும் நமது உணவின் பெரும்பகுதி இழக்கப்படுகிறது. இது எங்களுக்கு மிகுந்த சோகத்தை அளிக்கிறது, ஏனெனில் பயிர்களை வளர்க்க எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகின்றன.
அலிசியா காஹுய்யா
மனித உரிமை வழக்கறிஞர்
மனித உரிமை வழக்கறிஞரான அமல் குளூனி தனது பணிக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களாக அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இவர் வாதிட்டு வருகிறார்.
அர்மேனியா, மியான்மர் நாடுகளில் நடந்த இனப்படுகொலை, மலாவி மற்றும் கென்யாவில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல் மற்றும் யுக்ரேனில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் இவர் பணியாற்றிய முக்கிய வழக்குகள் ஆகும்.
இவரது சமீபத்திய வெற்றிகளில் ஒன்று இஸ்லாமிய அரசு மற்றும் டார்ஃபர் இடையேயான பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதிட்டது. அடக்குமுறை ஆட்சிகளால் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பிற அரசியல் கைதிகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இவர் உதவியுள்ளார்.
இவர் கொலம்பியா சட்டப் பள்ளியில் துணைப் பேராசிரியராகவும், குளூனி அறக்கட்டளையின் இணை நிறுவனராகவும் உள்ளார், இந்த அறக்கட்டளை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட ஆதரவை வழங்குகிறது.
மாகாண அமைச்சர்
பிரேசிலின் வளர்ந்து வரும் பூர்வகுடிகள் உரிமைகள் இயக்கத்தின் ஒரு முக்கிய நபர். 2023ஆம் ஆண்டில் சோனியா குவாஜஜாரா, பூர்வீக மக்களுக்கான தனது நாட்டின் முதல் அமைச்சரானார். இதை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேசில் அதிபர் லுலா டா சில்வா ஒரு வரலாற்று நியமனம் என்று புகழந்தார்.
சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு எதிரான போரை தனது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக ஆக்குவதாக அவர் சபதம் செய்துள்ளார்.
குவாஜஜாரா, அமேசான் பகுதியில் உள்ள அராரிபோயாவில் கல்வியறிவற்ற பெற்றோருக்கு பிறந்தார். அங்கிருந்தே சூழல் அமைப்பில் பேரழிவை ஏற்படுத்தும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக தனது பணிகளை தொடங்கினார்.
அவர் இலக்கியத்தை தேர்வு செய்து படித்துள்ளார். செவிலியராகவும் ஆசிரியராகவும் பணிபுரிந்து, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2022இல் அவர் சாவ் பாலோ மாநிலத்திற்கான முதல் பழங்குடி காங்கிரஸ் பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டார்.
காலநிலை நீதியை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் இனவெறியை எவ்வாறு எதிர்ப்பது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் சுற்றுச்சூழலை சிறந்த முறையில் பாதுகாக்கக்கூடிய மக்கள் அதன் அழிவால் முதலில் பாதிக்கப்படுகின்றனர். பழங்குடி மக்களாகிய நாம் பல்லுயிர் மற்றும் வாழ்வின் உண்மையான காவலர்கள்.
சோனியா குவாஜஜாரா
தீயணைப்பு அதிகாரி
முதலில் ஓபரா பாட்டு ஆசிரியராக இருந்த சோஃபியா கொசச்சேவா 2010ம் ஆண்டு தீயணைப்பு படை வீரர்களை பார்த்தது முதல் தனது பாதையை மாற்றிக்கொண்டார்.
இவர் தீயணைப்பு வீரர் ஆனது மட்டுமின்றி ரஷ்யாவில் ஏற்படும் காட்டுத்தீயை அணைப்பதற்கான உதவிகளை செய்யும் தன்னார்வலர்களை பயிற்சியளிப்பதற்கான குழுவை உருவாக்கியுள்ளார். இது வளர்ந்து நாடு முழுவதும் 25 தன்னார்வலர்கள் குழுவாக உயர்ந்துள்ளது.
"தேவையில்லாத அமைப்பு" என்று முத்திரை குத்தப்பட்டு இந்த என்ஜிஓவின் ரஷ்ய கிளை மூடப்படுவதற்கு முன்பு வரை க்ரீன்பீஸ் அமைப்போடு இணைந்து நூற்றுக்கணக்கான தீயை அணைப்பதற்கு இவர் உதவியுள்ளார்.
மேலும் கொசச்சேவா, தன்னார்வல காட்டுத் தீயணைப்பு வீரர்களுக்கான இணையதளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இது ரஷ்யாவில் காட்டுத்தீயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்தான தகவல்களின் முழுமையான தரவுத்தளமாக கருதப்படுகிறது.
காலநிலை நெருக்கடி எவ்வளவு பரவலாக இருக்கிறது என்பது முக்கியமில்லை, அனைத்து பெரிய சாதனைகளும் சிறிய விஷயத்தில் இருந்துதான் தொடங்குகின்றன. உலக அளவிலான மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாம் மிக சிறியவர்களாக தெரியலாம், ஆனால், நாம் முதலில் மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்க வேண்டும்.
சோஃபியா கொசச்சேவா
முன்னாள் ராணுவ அதிகாரி
2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குயின் போது 11 வயதான ரினா கோனோய் பெண் பாதுகாப்பு வீரர்களால் மீட்கப்பட்டார். அதற்கு பிறகு ஜப்பானின் தற்காப்புப் படைகளில் பணியாற்ற வேண்டும் என்று கனவு கண்டனர்.
கனவுகளை பின் தொடர்ந்து அவர் ஒரு ராணுவ அதிகாரியானார். ஆனால் "தினசரி" பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததால் அவரது குழந்தை பருவ கனவுகள் சிதைந்தன.
கோனோய் 2022இல் ராணுவத்தை விட்டு வெளியேறி, பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு பொது பிரசாரத்தைத் தொடங்கினார். இது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் ஒரு கடினமான பணியாகும். அவருக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து பொதுவெளியில் பேசியபோது பலமுறை பின்னடவை சந்தித்தார்.
அவரது குற்றச்சாட்டையடுத்து துறை ரீதியான விசாரணை நடத்தும் நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வெளிவந்தன. பின்னர் பாதுகாப்பு அமைச்சகம் கோனோயிடம் மன்னிப்பு கேட்டது.
கருமுட்டை பாதுகாப்பு ஆர்வலர்
2018 ஆம் ஆண்டில், பெய்ஜிங்கில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் தனது கருமுட்டைகளை உறைய வைக்க முயன்றார். ஆனால் திருமணமாக சூ சாவ்சாவ், இந்த நடைமுறையை மேற்கொள்ள அனுமதி இல்லையென்றும், தம்பதிகளுக்கு மட்டுமே இந்த வசதியை பெறமுடியும் என்று அவரிடம் கூறப்பட்டது.
சீனாவில் திருமணமாகாத பெண்கள் கருமுட்டைகளை பாதுகாப்பாக உறைய வைக்க உரிமைகள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மருத்துமனையிலிருந்து நீதிமன்றம் சென்றார்.
2019 டிசம்பரில் தொடங்கிய இந்த முன்னோடி சட்டப் போராட்டம், நாட்டின் குறைந்த பிறப்பு விகிதம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் தலைப்புச் செய்திகளாக மாறியது.
இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் சூவின் வழக்கு சட்டம், மருத்துவம் மற்றும் நெறிமுறைகள் ஆகிய துறைகளில் உள்ள அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இன்று, அவர் திருமணமாகாத சிங்கிள் பெண்களுக்கு இனப்பெருக்க உரிமைகள் மற்றும் உடல் உரிமைகளுக்கான முன்னணி வழக்கறிஞராக இருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
1885 ஆம் ஆண்டு பிஷப் ஆக்லாந்தின் தொகுதியின் முதல் கண்டர்வேட்டிவ் கட்சியின் முதல் எம்.பியாக கடந்த 2019 ஆண்டு டெஹன்ன டவிசன் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2022 ஆன் ஆண்டு அமைச்சரவையில் அமரவைக்கப்பட்டார். அவர் சமூக இயக்கம், மீளுருவாக்கத்தின் மீது அதிக கவனத்தை செலுத்தினார்.
தனக்கு இருக்கக் கூடிய ஒற்றைத் தலைவலியை பற்றி வெளிப்படையாகவே பேசினார். அவர் கடந்த, 2023 செப்டம்பரில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
டேவிசனுக்கு 13 வயதாக இருந்த போது அவரது தந்தை ஒரே அடியில் கொலை செய்யப்பட்டார். அது இவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டு அரசியலுக்கு அழைத்து வந்தது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரே அடியில் கொலை செய்வது, அடித்து கொலை செய்வதற்கு எதிராக குழுவை உருவாக்கி பிரச்சாரம் செய்தார்.
அதேபோல் ஒற்றைத் தலைவலி மற்றும் லோபுலர் புற்று நோய்க்கான கூடுதலாக ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் பிரசாரங்கள் செய்தார்.
அகதிகள் உரிமைக்கான செயற்பாட்டாளர்
ஆஃப்கானிஸ்தானை கடந்த 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் கையகப்படுத்திக் கொண்டனர். அப்பொழுது பலர் அகதிகளாக சிக்கிக்கொண்டனர் அவர்களை பாதுகாத்திடும் வகையில் தோஸ்தி நெட்வொர்க் என்ற அமைப்பினை சும்மியா டோரா உருவாக்குகிறார்.
அவர் ஒரு அகதியாக இதனை நிறுவி வழி நடத்துகிறார்.
இந்த அமைப்பின் மூலம் ஆஃப்கானிஸ்தானில் அகதிகளாக வாழ்பவர்களின் முக்கிய ஆதாரங்கள், தகவல்கள் திரட்டப்பட்டன.
அதேபோல இடம் பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொண்டு அகதிகள் மீள்குடியேற்றம், மோதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வியை பெற்றுத் தருவதற்காக ஐநா, உலக வங்கி, மலாலா நிதி மற்றும் ஃபியூச்சர் போன்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இந்த கூட்டமைப்பு மூலம் அவசரகால சூழல்களில் அகதிகள் மற்றும் பெண்கள் பெண்கள் மீது குறிப்பாக கவனம் செலுத்தி அவர்களுக்கான கல்வி பெற்று தருவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் செயற்பாட்டாளர்
ஹீரோ வுமன் ரைசிங் அல்லது மாமா ஷுஜா என்ற குழுவின் நோக்கம் டிஆர் காங்கோவிலுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலரான நீமா நமதாமு, அடிமட்டத்தில் இருந்து பணியாற்றும் வகையில் ஒரு அமைப்பை நிறுவினார். இது கல்வி மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களின் குரலைப் பெருக்கவும் அவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதற்கு அவர்களுக்குக் கற்பிக்கவும் செய்கிறது.
கிழக்கு காங்கோவின் தொலைதூரப் பகுதியில் பிறந்த நமதாமு தனது இரண்டு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற தனது இனத்தைச் சேர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண்மணி ஆவார்.
பின்னாளில் அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், நாட்டின் பாலினம் மற்றும் குடும்ப அமைச்சகத்தின் ஆலோசகராக இருந்துள்ளார்.
வழக்கறிஞர்
யேல் பரௌதா-பஹத் என்னும் இவர் பெண்கள் அமைதி இயக்கத்தின் இணை இயக்குநர். இஸ்ரேலில் 50,000-கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைதி இயக்கத்திற்கு சட்ட ரீதியாக பின்புலமாக இருக்கிறார்.
2014-ம் ஆண்டு நிறுவப்பட்ட பெண்கள் அமைதி அமைப்பு இஸ்ரேல் - பாலத்தீன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்புகிறது. இந்த அமைதிக்கான நடைமுறையில் பெண்களின் பங்கையும் அது வலியுறுத்துகிறது.
பாலத்தீனில் செயல்படும் சூரியனின் பெண்கள் என்ற அமைப்புடன் பெண்கள் அமைதி அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறது.
பெண்கள் அமைதி அமைப்பின் இணை நிறுவனரும், முக்கியமான அமைதி ஆர்வலரும் தனது வழிகாட்டியுமான விவியன் சில்வருக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளதாக ப்ரௌதா-பஹத் கூறுகிறார். இஸ்ரேலியர்- பாலத்தீனர் இடையே புரிந்துணர்வு மற்றும் சமத்துவத்தை வளர்ப்பதற்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த விவியன் சில்வர், 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
Politics4Her-இன் நிறுவனர்
பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக யாஸ்மினா தொடங்கிய Politics4Her, இளம் பெண்களை அரசியலில் பங்கெடுக்கவும் அது சார்ந்து முடிவுகள் எடுப்பதிலும் ஈடுபட ஊக்குவித்து வருகிறது.
மொரோக்கோவில் கடந்த செப்டெம்பரில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டபொழுது யாஸ்மினாவும் அவரது நிறுவனமும் பாலின புரிதல் கொண்ட உதவிகளுக்கான கோரிக்கையை வைத்தனர்.
மாதவிடாய் நேரங்களில் தேவையான பொருட்கள் கிடைக்காதது மற்றும் கட்டாய திருமணங்கள் போன்று பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் எதெல்லாம் இதுபோல பேரழிவு காலங்களில் இன்னும் தீவிரமடைகிறது என்பதனை அடையாளம் காண்பது குறித்த ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தார்.
பல இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக மற்றும் குழு உறுப்பினராக, இளம் பெண்களுக்கு அவர்களின் தலைமைத்துவ திறன்களை வளர்க்க உதவுகிறார். அவரது பணி அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் UN Women peace-builder என்ற விருதைப் பெற்றுத் தந்துள்ளது.
குழந்தை திருமணத்திற்கு எதிரான ஆர்வலர்
மலாவி நாட்டின் லிலோங்வே பகுதியில் வளர்ந்த உலண்டா மடம்பா, தனது பகுதியில் பெண்கள் கல்வி கற்பதற்கு மிகக்குறைந்த ஆதரவே கிடைப்பதை அறிந்து கொண்டார். அதனால் பல பெண்கள் 18 வயதிற்கு முன்பே பள்ளியை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள அழுத்தம் தரப்படுவதையும் அறிந்து கொண்டார்.
மடம்பா சமூகத்தின் வழக்கத்திற்கு எதிராக கலகம் செய்து, பல்கலைக்கழகத்தில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார்.
குழந்தை திருமணத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய சட்டங்களை மறுசீரமைக்க வலியுறுத்தி பணியாற்றிவருகிறார். மேலும் இளம் வயதிலேயே பிரசவிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறார்.
AGE ஆப்பிரிக்கா அமைப்பின் மலாவி நாட்டின் இயக்குநராக உலண்டா தற்போது பணியாற்றி வருகிறார். ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளையும் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
பத்திரிகையாளர்
தொலைக்காட்சி பிரபலமான தாமர் முசெரிட்ஜ், தமுனா என்றும் அழைக்கப்படுகிறார். தனது 18 வயதிலிருந்தே ஜார்ஜியாவின் பொது ஒளிபரப்பு ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்து வருகிறார். ஆனால் தனது 31வது வயதில், அவர் தத்தெடுக்கப்பட்டவர் என்பதை கண்டுபிடித்தபோது அவரது வாழ்க்கை வெகுவாக மாறியது.
அவர் தனது உண்மையான பெற்றோரைத் தேடும் முயற்சியின் போது, ஜார்ஜியாவில் 1950களில் இருந்து பெரிய அளவில் கள்ளச் சந்தை மூலமாக குழந்தைகளை தத்தெடுக்கும் தொழில் நடந்து வருவதற்கான ஆதாரம் கிடைத்தது.
"I'm searching" என்ற பெயரில் ஃபேஸ்புக் குழுவை அமைத்து, மகப்பேறு மருத்துவமனைகளிலிருந்து சட்டவிரோதமாக தத்தெடுக்கப்படுவது பற்றிய உரையாடலை தூண்டினார்.
இவரது அமைப்பின் மூலமாக சுமார் 800 குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க உதவினார். ஆனால் அவர் இன்னும் தனது சொந்த பெற்றோர்களை தேடிக்கொண்டிருக்கிறார்.
முன்னாள் அரசியல்வாதி மற்றும் சமாதான பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர்
வடக்கு அயர்லாந்தின் புனித வெள்ளி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இந்த ஆண்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பல கட்சி அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது மோனிகா மெக்வில்லியம்ஸ் ஒரு முன்னணி பேச்சுவார்த்தையாளராக முக்கிய பங்கு வகித்தார்.
அவர் வடக்கு அயர்லாந்து மகளிர் கூட்டணியை இணை-ஸ்தாபித்தார், இது மதவெறி பிளவைக் கடந்த ஒரு அரசியல் கட்சி, இது சமாதான ஒப்பந்தத்தில் முக்கியமான விதிகளை அறிமுகப்படுத்தியது.
அவர் முதல் வடக்கு அயர்லாந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் வடக்கு அயர்லாந்து மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை ஆணையராக, அவர் வடக்கு அயர்லாந்திற்கான உரிமைகள் மசோதா பற்றிய ஆலோசனையை உருவாக்கினார்.
மெக்வில்லியம்ஸ் தற்போது ஆயுதக் குழுக்களின் கலைப்புக்கான ஆணையராக பணியாற்றுகிறார் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பரவலாக வெளியிட்டார்.
பெண்கள் உரிமைகள் மற்றும் காலநிலை ஆர்வலர்
அல்மசார் நூலக மையத்தின் நிறுவனரரான நஜ்லா மொஹமத்-லாமின், தென்மேற்கு அல்ஜீரியாவில் உள்ள சஹாராவி அகதிகள் முகாம்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து கல்வி கற்பிக்க விரும்புகிறார்.
1975 ஆம் ஆண்டு முதல் மொராக்கோவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள முன்னாள் ஸ்பானிஷ் காலனியான மேற்கு சஹாராவைச் சேர்ந்த அவரது குடும்பம் வன்முறையில் இருந்து தப்பிய பின்னர் நாடு கடத்தப்பட்டது.
முகாம்களில் பிறந்து வளர்ந்த மொஹமத்-லாமின், தனது இளமை பருவத்தில் ஆங்கிலம் கற்றுக்கொண்டார், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்காக மொழிபெயர்த்தார். மேலும் கிரவுட்ஃபண்டிங் மூலமாக நிதியை திரட்டி தனது கல்வியை வெளிநாட்டில் முடித்தார்.
வளங்குன்றா வளர்ச்சி மற்றும் பெண்கள் படிப்பில் பட்டம் பெற்ற பிறகு, அவர் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சஹாராவி அகதிகளுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தண்ணீர் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையை சமாளிக்க உதவுவதற்காக முகாம்களுக்குத் திரும்பினார்.
ஒரு பாலைவனப் பகுதியில் காலநிலை மாற்றத்தின் வளர்ந்து வரும் தாக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும். வெள்ளம் மற்றும் மணல் புயல்களால் எங்கள் வீடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதையும், நமது மக்கள் தீவிர வெப்பத்தால் பாதிக்கப்படுவதையும் நாம் காண்கிறோம். இவையனைத்தும், காலநிலை நெருக்கடிக்கு நமது மக்களின் பங்களிப்பு ஏதுமில்லாததால் நிகழ்கின்றன.
நஜ்லா மொஹமத்-லாமின்
எழுத்தாளர் மற்றும் கலைஞர்
செபிதே ரஷ்னு ஈரானில் கட்டாய ஹிஜாப் விதிகளை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக அறியப்பட்டார்.
ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறிய பெண் ஒருவருடன் பேருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
காவலில் இருந்தபோது, அவர் தனது நடத்தைக்காக 'மன்னிப்பு' கேட்டு, காயப்பட்ட முகத்துடன் அரசு தொலைக்காட்சியில் தோன்றினார். இது ஜூலை 2022 இல், 22 வயதான மஹ்சா அமினி, இரான் காவல்துறையின் கட்டுப்பாடில் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹிஜாப் அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ரஷ்னு ஆன்லைனில் பகிர்ந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனது செயல்பாட்டிற்காக பல்கலைக்கழகத்தில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.
இவர் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து, ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கும் விதிகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.
காலநிலை கொள்கை ஆலோசகர்
காலநிலை கொள்கைகளில் முன்னணி நிபுணரான ஐரினா ஸ்டாவ்சுக், சமீபத்தில் ஐரோப்பிய காலநிலை அறக்கட்டளையில் உக்ரைன் திட்ட மேலாளராக சேர்ந்தார். போருக்குப் பிந்தைய தனது நாட்டின் மீட்சிக்கான பசுமை மற்றும் காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் தீர்வுகளை வடிவமைக்கும் குறிக்கோளுடன் ஐரினா செயல்பட்டு வருகிறார்.
இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன், அவர் 2019 முதல் 2022 வரை யுக்ரேனிய அரசாங்கத்தில் துணை சுற்றுச்சூழல் அமைச்சராக பணியாற்றினார். அதில் காலநிலை மாற்ற கொள்கைகள் வகுக்கும் பாத்திரத்தை இவர் மேற்கொண்டிருந்தார். ஐரோப்பிய ஒருங்கிணைப்பு, சர்வதேச உறவுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றிற்கும் இவர் பொறுப்பாக இருந்தார்.
ஸ்டாவ்சுக், ஈகோ ஆக்சன், கீயவ் சைக்ளிஸ்ட் சங்கம்(U-Cycle) ஆகிய இரண்டு சுற்றுச்சூழல் சார்ந்த தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். காலநிலை மாற்றத்தை நோக்கி பணியாற்றும் குழுக்களையும் இவர் ஒரே வலையமைப்பிற்குள் ஒருங்கிணைத்துள்ளார்.
நான் இருக்கும் இடத்தில் என்னால் முடிந்ததைச் செய்வதே எனது பணி. அசிசியின் புனித பிரான்சிஸின் வார்த்தைகளை நான் கடைப்பிடிக்கிறேன்: "தேவையானதைச் செய்வதன் மூலம் தொடங்குங்கள்; பின்னர் முடிந்ததைச் செய்யுங்கள்; திடீரென்று நீங்கள் சாத்தியமற்றதைச் செய்வீர்கள்."
ஐரினா ஸ்டாவ்சுக்
பெண்ணியவாதி
1970களிலிருந்து உலகளாவிய பெண்ணிய இயக்கத்தின் முனோடியாக விளங்கும் குளோரியா ஸ்டெய்னெம்-இன் பெண்ணியத்திற்கான பங்களிப்பு பல தலைமுறைகளாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெய்னெம் ஓர் சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், எழுத்தாளர், விரிவுரையாளர் மற்றும் ஊடக செய்தித் தொடர்பாளர். சமத்துவம் குறித்த பிரச்னைகளில் இந்த தளங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.
1971இல் மிஸ் மேகஸின் என்ற இதழை அவர் நிறுவினார். இந்த பத்திரிகை இன்றும் வெளியாகிறது. பெண்கள் உரிமைகள் இயக்கத்தின் செயல்பாடு, பிரச்னைகள் தொடர்பான விவரங்களை மைய நீரோட்டத்திற்குக் கொண்டுவந்த அமெரிக்காவின் முதல் இதழாக இது கருதப்படுகிறது.
89 வயதிலும் ஸ்டெய்னெம் தனது பணியை பெண்கள் ஊடக மையம், ERA கூட்டணி மற்றும் ஈக்குவாலிட்டி நவ் போன்ற அனுபவமிக்க நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறார்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான வழக்கறிஞர்
2008ல் தனது சகோதரி காணாமல் போனதை தொடர்ந்து, பெர்னாடெட் ஸ்மித் ஓய்வில்லாமல் பதில்களை தேடி வருகிறார்.
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் கனடா முழுவதும் கொல்லப்பட்டுள்ள பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான முன்னணி வழக்கறிஞராக இருந்து வருகிறார் இவர். மேலும் இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான பதிலை பெற்று தருவதற்காக ஒரு கூட்டமைப்பையும் உருவாக்கியுள்ளார்.
மேலும் இவர் வின்னிபெக் சிவப்பு நதியில் தொலைந்துபோன நபர்களின் உடல்கள் மற்றும் ஆதாரங்களை தேடும் ட்ராக் தி ரெட் என்ற அமைப்பின் இணை-நிறுவனரும் ஆவார்.
சமீபத்தில் மனிடோபாவின் சட்டமன்றத்திற்கு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்மித் மற்றும் அந்த மாகாணத்தில் இருந்து அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட தேசத்தின் முதல் இரண்டு பெண்களில் முதலமானவராக வரலாறு படைத்துள்ளார். இவர் தற்போது வீட்டுவசதி, போதைக்கு அடிமையாதல் மற்றும் வீடற்றோர் துறையின் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
வீடுகளுக்கான உரிமைக் குரல் எழுப்புபவர்
அமெரிக்க மாகாணமான மயாமியின் லிட்டில் ஹைட்டி பகுதியைச் சேர்ந்தவரான மேடம் ரெனிடா ஹோம்ஸ், அமெரிக்காவின் 'ஃபுளோரிடாவில் 'அவர் ஹோம்ஸ்' என்ற பெயரில் சொத்து வாங்க ஆலோசனைகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
விளிம்புநிலை மக்களுக்கும் வீட்டு உரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விழிப்புணர்வு செய்து வருகிறார் ஹோம்ஸ். மேலும் காலநிலை மாற்றத்தின் விளைவாக கடல் மட்டம் உயர்வதால், கடலுக்கு அப்பால் இருக்கும் வீடுகளின் விலை உயர்ந்து வருவது குறித்தும் இவர் பல மட்டங்களில் குரல் எழுப்பி வருகிறார்.
ரெனிடா ஹோம்ஸ் உள்பட 11 குழந்தைகளை அவரின் தாய் மட்டுமே தனியாக வளர்த்து வந்தார். மாற்றுத்திறனாளியான ஹோம்ஸ் 11 குழந்தைகளில் மூத்தவர் ஆவார்.
அவர் கிளியோ நிறுவனத்தின் மன உறுதிமிக்க பெண்களை மேம்படுத்தும் திட்டத்தின் ஒர் ஊறுப்பினர் ஆவார். இது அறிவியல் அடிப்படையிலான கல்வி மூலம் காலநிலை நடவடிக்கையைத் தூண்ட முயலும் ஒரு திட்டமாகும். ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் உள்-நகரப் பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் உள்ளூர் வீட்டு வசதி நிறுவனங்களுக்கு இவர் ஆலோசனைகளை வழங்கி உதவி வருகிறார்.
பூமி தாய்க்கும் பெண்களுக்கும் இடையேயான பிணைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. நாங்கள் மனஉறுதி மிக்கவர்கள், வலிமையானவர்கள், முளைத்து வருவதற்காக உருவாக்கப்பட்டவர்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் மற்றும் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.
ரெனிடா ஹோம்ஸ்
பசுமை கட்டட தொழில்முனைவோர்
2014 ஆம் ஆண்டில், ஐ.எஸ். அமைப்பு தனது சொந்த நாடான இராக்கின் பெரும் பகுதிகளை கைப்பற்றியபோது, பஸிமா அப்துல்ரஹ்மான் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
இராக்கின் பல நகரங்கள் சண்டையின் விளைவாக அழிக்கப்பட்டன. ஆனால் அப்துல்ரஹ்மான் கட்டமைப்பு பொறியியலில் தனது முதுகலை படிப்பை முடித்த பிறகு சொந்த நாட்டுக்கு திரும்பினார். அவர் இதற்கு உதவ ஒரு வழியையும் கண்டறிந்தார்.
பசுமை கட்டடத்திற்காக உருவாக்கப்பட்ட இராக்கின் முதல் முயற்சியான KESK-ஐ அவர் நிறுவினார். பசுமையான கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது இராக்கின் பாரம்பரிய கட்டட முறைகளுடன், சமீபத்திய ஆற்றல்-திறனுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களை இணைப்பதைக் குறிக்கிறது.
இன்றைய கட்டட நடைமுறைகள் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதில் அவர் கவனத்துடன் உள்ளார்.
காலநிலை நெருக்கடி குறித்து நான் அடிக்கடி கவலைப்படுகிறேன். அதன் அபாயங்களைக் குறைப்பதற்கான தீர்வின் ஒரு பகுதியாக நாம் இல்லாமல், எப்படி அமைதியைக் காண முடியும் என்று என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
பஸிமா அப்துல்ரஹ்மான்
பொது அறுவை சிகிச்சை மருத்துவர்
காஸாவின் சான்றளிக்கப்பட்ட முதல் பெண் அறுவை சிகிச்சை மருத்துவர் சாரா அல்-சக்கா, அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவில் பணிபுரிகிறார்.
போருக்கு நடுவே மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கு வழியே அவர் ஆவணப்படுத்தி, உலகிற்கு காட்டுகிறார். ஹமாஸூக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் அல்-ஷிஃபா மருத்துவமனை மோசமாக சேதமடைந்துள்ளது.
மருத்துவமனையில் மின்சாரம், எரிபொருள், தண்ணீர், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் பதிவிட்டார். அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய ராணுவம் நுழைவதற்கு சற்று முன்பாக அவர் அங்கிருந்து வெளியேற நேரிட்டது. இது ஹமாஸைக் குறிவைக்கும் நடவடிக்கை என்று இஸ்ரேல் கூறுகிறது.
காஸா இஸ்லாமிக் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படித்த அல்-சக்கா, லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சை படித்தார். காஸாவில் தற்போது அவர் மட்டுமே பெண் அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல. அவரை அடியொற்றி மேலும் பல பெண்களும் வந்துள்ளனர்.
தன்னார்வ மீட்பு பணியாளர்
2017ல் சிரிய போர் தொடங்கியபோது , அமினா அல்-பிஷ் சிரிய சிவில் பாதுகாப்புக்கு தன்னார்வல மீட்பு பணியாளராக முடிவு செய்தார். அப்போது மீட்பு பணிக்காக வந்த ஒரு சில முதல் பெண் தன்னார்வலர்களில் இவரும் ஒருவர்.இந்த தன்னார்வல அமைப்பு வைட் ஹெல்மெட்ஸ் என்ற பெயரில் அறியப்படுகிறது. மக்களை காப்பாற்றும் நம்பிக்கையில் காயம்பட்ட மக்களுக்கு முதலுதவி வழங்கும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார்.
பிப்ரவரி 2023ல் சிரியா மற்றும் துருக்கியைத் தாக்கிய பூகம்பங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க அமினா தன்னார்வலராக பணியாற்றினார். இது அந்த பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியது மட்டுமின்றி அமினாவின் சொந்த குடும்ப உறுப்பினர்களே இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
தற்போது இன்னமும் சண்டை நடைபெற்று வரும் வடக்கு சிரிய பகுதியில் தனது சமூகத்தை சேர்ந்த பெண்களின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறார் அல்-பிஷ். வணிக நிர்வாகம் படித்து வரும் இவர் அமைதியான சிரியாவை கட்டமைப்பதே தனது கனவு என்று கூறுகிறார்.
மனநல உரிமைக்காக வாதிடுபவர்
நடைமுறைபடுத்தக்கூடிய, தொடர்புபடுத்தக்கூடிய வகையில் நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே ஜெனிபர் உச்செந்துவால் நிறுவப்பட்ட இளைஞர்கள் தலைமையிலான அமைப்பான SustyVibes-இன் லட்சியம்.
உசெந்துவின் சமீபத்திய பணி, ஆப்பிரிக்க இளைஞர்களின் மன ஆரோக்கியத்தில் காலநிலை நெருக்கடியின் தாக்கங்களை ஆராய்வதில் கவனம் செலுத்துகிறது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உளவியல் சிகிச்சைகளை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க இளைஞர்களை ஒன்று திரட்டும் வகையில், 2022ஆம் ஆண்டும் ஆப்பிரிக்க சுற்றுச்சூழல் கவலை திட்டத்தை (TEAP) உருவாக்கினார்.
இந்த நிலை மாற்றவேண்டும் என்ற உத்வேகம் உள்ள மக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் காலநிலை உணர்ச்சிகளைப் பற்றி கற்றுக்கொள்வதில் கடினமான மற்றும் சங்கடமான வேலையைச் செய்வதே அவரது குறிக்கோள்.
காலநிலை நெருக்கடி குறித்து விவாதிக்கும் போது பலவிதமான உணர்ச்சிகளை அனுபவிக்கிறேன். என்னால் போதுமான மாற்றத்தை கொண்டு வரமுடியாது. ஆனால் சில விஷயங்களை எங்கள் முயற்சி மெதுவாக மாற்றத் தொடங்கியிருக்கிறது. என்னால் முடிந்த முயற்சியை நான் செய்கிறேன். மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது, ஓய்வெடுப்பது, அமைதியாக இருப்பது என காலநிலையால் தூண்டப்பட்ட எனது உணர்வுகளைப் பாதுகாக்க நான் முயல்கிறேன்.
ஜெனிஃபர் உச்செந்து
கால்நடை மருத்துவர்
விருது பெற்ற உகாண்டா கால்நடை மருத்துவரும், இயற்கை பாதுகாவலருமான கிளாடிஸ் கலீமா, காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அழிந்துவரும் மலை கொரில்லாக்களைக் காப்பாற்ற பணியாற்றுகிறார்.
மக்கள், கொரில்லாக்கள், பிற வனவிலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் வாழ்விடத்தை மேம்படுத்துவதன் மூலம் பல்லுயிர் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான 'கன்சர்வேஷன் த்ரூ பப்ளிக் ஹெல்த்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் இருக்கிறார்.
மூன்று தசாப்தங்களாக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, மலை கொரில்லாக்களின் எண்ணிக்கையை 300-லிருந்து சுமார் 500 ஆக அதிகரிக்க இவர் உதவியுள்ளார். இதனால் மலை கொரில்லாக்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து அழிந்துவரும் நிலைக்குத் தரமிறக்கப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் பூமியின் சாம்பியன் என்று கலீமா அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
காலநிலை நெருக்கடியில் எனக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு நடவடிக்கை, அதன் பாதிப்புகளை அனைவரும் ஏற்க தொடங்கியிருக்கின்றனர், இந்த நெருக்கடியைத் தணிக்கவும் மாற்றியமைக்கவும் புதுமையான முறைகள் உள்ளன.
கிளாடிஸ் கலீமா-ஜிகுசோகா
கடல்சார் விஞ்ஞானி
கார்பனை சேமித்து வைப்பதற்கும் மீன்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் கடற்புல் பயன்படுகிறது. ஆனால் நீருக்கடியில் இருக்கும் சில வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
லீயான் கல்லன்-அன்ஸ்வொர்த், ப்ராஜெக்ட் சீகிராஸின் நிறுவனர்களில் ஒருவர். மேலும் அந்த திட்டத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். இந்த திட்டமானது இங்கிலாந்தின் முதல் கடற்புல் மறுசீரமைப்பு திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ரோபோவைப் பயன்படுத்தி நீருக்கடியில் விதைகளை நடுவதற்கும், இப்படிச் செய்து இந்த வழிமுறையை எளிதாக்கி மற்ற நாடுகளுக்கு வழங்குவதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இதன் வழியாக நீருக்கடியில் உள்ள கடற்புல் பரப்பை அதிகரிக்க முடியும்.
லீயான், கடல் ஆராய்ச்சி சார்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலான பலதுறைகளில் அனுபவமுள்ள ஒரு விஞ்ஞானி.
தனியாகச் சாதிக்க நாம் செய்ய வேண்டியவை மிகஅதிகம், ஆனால் மக்கள் ஒன்றாகச் செயல்பட்டு அறிவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு சிறிய வாழ்விடத்தை உருவாக்க நான் என்னாலான சிறிய முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். இதே போல நமது பூமியையும், சமூகத்தை சிறந்த வாழ்விடமாக்கும் முயற்சியில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் பூமிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
லீயான் கல்லன்-அன்ஸ்வொர்த்
சாண எரிவாயு வணிக உரிமையாளர்
2012 இல், டிரான் காம் வியட்நாமில் உள்ள பண்ணைகளுக்கு காலநிலைக்கு ஏற்ற ஆற்றல் மூலங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியது.
இரண்டு குழந்தைகளின் தாயான அவர் சந்தையில் ஒர் இடைவெளியைக் கண்டார். அதை நிரப்பும் நோக்கில் வியட்நாமின் ஹனோய் நகரில் சாண எரிவாயு ஆலைகளை நிறுவி நிர்வகிக்கும் வணிகத்தைத் தொடங்கினார், பின்னர் இந்த செயல்பாட்டை மூன்று அண்டை மாகாணங்களுக்கு விரிவுபடுத்தினார்.
பசு, பன்றி உரம், ஆகாயத்தாமரை மற்றும் பிற கழிவுகளை சாண எரிவாயுவாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு ஆகும் செலவைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டத்தை தொடங்கினார் டிரான் காம். இயற்கை எரிவாயுவை விட மிகவும் நிலையான ஆற்றல் மூலமாக இது கருதப்படுகிறது. மேலும் இந்த ஆற்றல் மூலத்தை கொண்டு சமியல் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான மின்சாரத்தை நிர்வகிக்க முடியும்.
டிரான் மேற்கொள்ளும் வணிகங்கள் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தி, காலநிலை மாற்றத்தைத் தணிக்கத் தேவையான அரசியல் ஆதரவை வழங்குகின்றன.
நாம் வாழ வேண்டும், நன்றாக வாழ வேண்டும், எனவே உடற்பயிற்சி, சரிவிகித உணவை உண்ணுதல் மற்றும் தூக்க முறைகளை பராமரிப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயன்றேன். மக்கள் இயற்கையான வாழ்க்கை முறையை வாழவும், பழங்கள் மற்றும் காய்கறிகளை சொந்தமாக வளர்க்கவும், நமது காய்கறிகளில் ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக வாதிடவும் நான் ஊக்குவிக்கிறேன்.
டிரான் காம்
காட்டுத்தீயை கண்டறியும் தொழில்நுட்ப வடிவமைப்பாளர்
இந்த ஆண்டு, காட்டுத்தீ உலகின் மிகப்பெரிய காடுகளில் சிலவற்றை அழித்துள்ளது. தீயின் அளவு மற்றும் பரவலை கட்டுப்படுத்த தீயணைக்கும் வீரர்கள் அடிக்கடி போராடி வருவதால், சோனியா காஸ்ட்னர் அவர்களுக்கு உதவும் வகையில் தீ பரவுவதை முன்பே கண்டறிய உதவுவதற்கான ஒர் அமைப்பை நிறுவினார்.
பனோ AI ஆனது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தீ பரவுவதற்கு முன், பற்றுவதற்கான அறிகுறிகள் இருக்கும் நிலப்பரப்பை ஸ்கேன் செய்து, அவசரகாலச் சேவைகளை அழைப்பதற்கு பொதுமக்களை நம்பாமல், தானாகவே பேரிடர் குழுக்களுக்கு எச்சரிக்கை அனுப்பி நடவடிக்கைகளை விரைவுப்படுத்துகிறது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களில் சோனியா பணியாற்றியுள்ளார்.
எனக்கு நம்பிக்கை தருவது மனித கண்டுபிடிப்புகளின் நம்பமுடியாத சக்தி. காலநிலை நெருக்கடியின் மோசமான தாக்கங்களைத் தீர்க்க உதவும் தொழில்நுட்பம் மற்றும் தரவு சார்ந்த தீர்வுகளின் திறனை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
சோனியா காஸ்ட்னர்
செயற்கை நுண்ணறிவு நிபுணர்
மிகவும் செல்வாக்கு மிக்க கணினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப விஞ்ஞானியான டிம்னிட் கெப்ரு, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனத்தின் (DAIR) நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர். இது கணினி பெருநிறுவனங்களிடம் இருந்து விடுபட்ட, சுதந்திரமான சமூகத்தில் வேரூன்றிய செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான இடமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பங்களில் இன ரீதியான பாரபட்சம் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் கருப்பினத்தவரையும் சேர்க்கும் வகையில் மேம்படுத்தும் லாப நோக்கில்லாத நிறுவனத்தின் இணை நிறுவனராக அவர் இருக்கிறார்.
எத்தியோப்பியாவில் பிறந்த கணினி ஆய்வாளரான இவர், எத்தியோப்பிய மாணவர்களுக்கு கணினி நுட்பங்களை பயிற்றுவிக்கும் AddisCoder குழுவில் இருக்கிறார்.
2020-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் நெறிமுறை செயற்கை தொழில்நுட்பக் குழுவின் இணைத் தலைவராக இருந்த போது, செயற்கை தொழில்நுட்ப மொழி மாதிரிகளில் உள்ள பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆய்வுக் கட்டுரையை இணைந்து எழுதியுள்ளார். அதில், அமைப்பு ரீதியாக சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மக்கள் மற்றும் இடங்கள் பற்றி அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆய்வுக் கட்டுரையால் அவர் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற நேரிட்டது. அவரது கட்டுரையில் தொடர்புடைய ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் கூறியதுடன், அவர் பணியில் இருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தது. ஆனால், பணியிடத்தில் பாரபட்சம் காட்டப்படும் பிரச்னையை எழுப்பியதால் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கெப்ரு கூறினார்.
பொருளாதார நிபுணர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்
கிளாடியா கோல்டின் அமெரிக்க பொருளாதார வரலாற்று ஆசிரியர், தொழிலாளர் பொருளாதார நிபுணராகவும் இருக்கிறார். இவருக்கு இந்த ஆண்டு பெண்களின் வேலை வாய்ப்பு மற்றும் பாலின ஊதிய இடைவெளித் தொடர்பாக ஆராய்ச்சி செய்ததற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த விருதினை பெறும் மூன்றாம் பெண்ணாகவும் சக ஆண் பொருளாதார நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளாத முதல் பெண்ணாகவும் தனித்து நிற்கிறார் கோல்டின்.
இவர் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வருமான சமத்துவமின்மை,கல்வி, குடியேற்றம் போன்ற தலைப்புகளின் கீழ் ஆராய்ச்சியினை செய்து வருகிறார்.
மேலும், தொழில் மற்றும் குடும்பத்திற்கான பெண்களின் தேடல் பெண்களின் தொழில் மற்றும் திருமண முடிவுகளின் கருத்தடை மாத்திரையின் தாக்கம் இதன் வரலாறு உள்ளிட்டவற்றை ஆராய்ச்சி செய்து வருகிறார்.
வன மேலாளர்
இந்தோனீசியாவின் பழமைவாத ஏச்சே மாகாணத்தில் பெண்கள் தலைவர்களாக இருப்பது வழக்கத்திற்கு மாறானது.
சுமினி தனது கிராமத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் காடுகளை அழிப்பது என்பதை உணர்ந்தார். மேலும் இது காலநிலை மாற்றத்திற்கும் பங்களிக்கிறது, அதனால் இதை சரிசெய்ய உள்ளூர் பெண்களை திரட்டி தீர்வுகளை எடுக்க அவர் முடிவு செய்தார்.
251 ஹெக்டேர் காடுகளை 35 ஆண்டுகளாக நிர்வகிக்க தாமரன் பாரு கிராமத்தின் சமூகத்தை அனுமதிக்கும் வகையில் அவரது குழு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற்றது.
சுமத்ரா புலிகள், எறும்பு தின்னி மற்றும் பிற வனவிலங்குகளை அச்சுறுத்தும் சட்டவிரோத மரம் வெட்டும் மற்றும் வேட்டையாடுபவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் சுமினி. தனது கிராமத்தின் வன மேலாண்மை பிரிவை (LPHK) அவர் வழிநடத்துகிறார்.
இந்நாட்களில் காடழிப்பு மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதால் அதிகமாகி இருக்கிறது. காடுகளை பாதுகாத்து, வாழ்க்கையை மேம்படுத்த நாம் கூட்டாக இணைந்து காலநிலை நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று கவனம் செலுத்த வேண்டும்.
சுமினி
மருத்துவர்
மால்டா கருக்கலைப்புக்கு எதிராக ஐரோப்பியாவில் கடுமையான சட்டங்களை கொண்டு இருந்தது. நடாலி சைலா கருக்கலைப்பு தொடர்பான உதவிகள் ஆலோசனைகளை தேவைப்படும் பெண்களுக்கு செய்து வருகிறார்.
அவர் டாக்டர் ஃபார் சாய்ஸ் மால்டாவின் இணை நிறுவனரானர். மேலும் கருக்கலைப்பை குற்றம்ற்றதாக்குதல், சட்டபூர்வமாக்குதல், கருத்தடைக்கான சிறந்த வழிகள் ஆகியவற்றை ஆதரித்தார்.
பெண்ணி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே மால்டாவில் தடை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் சைலா. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே பெண்கள் கருக்கலைப்பு மத்திரைகளை உட்கொள்கின்றனர். இதனை தடுப்பதற்காக அவரே ஒரு தனி உதவி எண்ணை அறிவித்து அதன் மூலம் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண் கருக்கலைப்புக்கு முன், கருக்கலைப்பு காலம் அதற்கு பின் எப்படி உடலை பாதுகாக்க வேண்டும் என கூறி வருகிறார்.
நாட்டின் இனப்பெருக்க ஆரோக்கயத்தை பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக 10 முதல் 13 வயது உடைய பெண்களுக்கு புரிந்து கொள்ளும் விதமாக எனது உடலின் சிறந்த பயணம்( மை பாடிஸ் பெண்டாஸ்டிக் ஜர்னி) என்ற பெயரில் புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
விஞ்ஞானி
உலக வள நிறுவனத்தில் (WRI) இயக்குநராக இருக்கும் சூசன் சோம்பா, மத்திய கென்யாவில் உள்ள கிரின்யாகா கவுண்டியில் குழந்தை பருவ வறுமை குறித்து தனக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தன்னை ஊக்குவிக்கிறது என்று கூறுகிறார்.
காடுகளைப் பாதுகாப்பது, நிலப்பரப்புகளை மீட்டெடுப்பது மற்றும் ஆப்பிரிக்காவின் உணவு முறைகளை மாற்றுவது ஆகியவற்றில் அவர் முதன்மையாக கவனம் செலுத்துகிறார்.
காங்கோ படுகையின் வெப்பமண்டல காடுகள் முதல் வறண்ட மேற்கு ஆப்பிரிக்க சஹேல் மற்றும் கிழக்கு ஆபிரிக்கா வரை, சோம்பா சிறு விவசாயிகளுடன், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் வேலை செய்வதில் நேரத்தை செலவிடுகிறார்.
தீவிரமடைந்துவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், மேலும் மீள்தன்மையுடைய சமூகங்களை உருவாக்குவதற்காக அவர் தனது நிபுணத்துவத்தை அரசாங்கங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
உலகத் தலைவர்களின் செயலற்ற தன்மையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். குறிப்பாக அதிக அளவு காற்று மாசு ஏற்படுத்தும் நாடுகள் அவர்களின் போக்கை மாற்றும் பொருளாதார சக்தியைக் கொண்டுள்ளனர், ஆனால் பணம், அதிகாரம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக அதை செய்யாமல் இருக்கிறார்கள். அது சார்ந்த எனது உணர்வுகளை, இயற்கைப் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு, நமது உணவு முறைகளை மாற்றுதல் மற்றும் கொள்கைகளை மாற்றுதல் ஆகியவற்றில் ஆப்பிரிக்கா முழுவதும் பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து செயல்படுவது மூலம் சமாளிக்கிறேன்.
சூசன் சொம்பா
விஞ்ஞானி
கானன் டாக்டேவிரென் அமெரிக்கா மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்ஐடி) இணைப் பேராசிரியரான பணியாற்றி வருகிறார்.இவர், மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக அணியக்கூடிய அல்ட்ராசவுண்ட் பேட்ச்.
அவரது அத்தை தனது 49 வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பதை இறுதி கட்டத்தில் அறிந்து அதன் பின் அதனை சரி செய்ய முயன்று 6 மாதம் மட்டுமே அவரது அத்தை உயிருடன் இருந்தார்.
அத்தையின் நிலையை கண்ட கானன் மார்பகப் புற்றுநோயை வரும் முன்பே கண்டறியும் சாதனத்தை கண்டுபிடிக்க முடிவு செய்து பிராவுடன் இணைத்து பெண்கள் பேட்ச் போன்ற சாதனம் அணிந்து மார்பகப் புற்றுநோயினை கண்டறியும் சாதனைத்தை உருவாக்கி இருக்கிறார். இது லட்சக்கணக்கான பெண்களின் உயிரை மார்பகப் புற்றுநோய் ஆரம்பகாலகட்டத்தில் கண்டறிந்து பூரண குணமடைய இந்த கருவி உதவும் என்கிறார்.
சமூக உளவியலாளர்
சமூக உளவியலாளர் ஃபேபியோலா ட்ரெஜோ இரு தசாப்தங்களுக்கு முன் தன்னுடைய கல்வி பயணத்தை தொடங்கிய போது, சமூகநீதி பிரச்சனையாக பெண்களின் பாலுறவு இன்பம் குறித்து கவனம் செலுத்தும் எந்த ஆய்வுகளும் மெக்ஸிகோவில் இல்லை.
ட்ரெஜோ தனது பாதையை சமூக சமத்துவமின்மை, பாலின அடிப்படையிலான வன்முறை, பாலியல் இன்பத்தின் அரசியல் , பெண்களுக்கான பாலியல் நீதியை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதாக அமைத்துக் கொண்டார்.
சில ஏற்றத்தாழ்வுகள் பெண்களை பாலியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக ஆக்குகிறது என்று வாதிடுகிறார் இவர். அவர்களோடு பேசுவது , அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நடைமுறைப் பட்டறைகள் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளி வருவதற்கு இன்பம், பாலியல் உச்சம் மற்றும் சுயஇன்பம் ஆகியவற்றை பற்றி தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவுகிறார் இவர்.
இன்னமும் பெண் ஆரோக்கியம் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் பேசக்கூடாத ஒன்று போல் பார்க்கப்படும் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஸ்பானிஷ் பேசும் சமூகங்களில் இவரது செயல்பாடுகள் எதிரொலிக்கின்றன.
ஒலிப்பதிவாளர்
ஐரோப்பாவின் பழமையான மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஒன்றான போலந்தில் உள்ள பயாலோவெய்ஸாவில் இயற்கையின் மிகச்சிறந்த ஒலியை பதிவு செய்ய கையில் டேப் ரெக்கார்டருடன் இஸபெலா ட்ளூஸிக் தயாராகிறார்.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கள ஒலிப்பதிவுத் துறையில் கால் பதிக்கும் இளம்பெண் என்பதால் மட்டுமின்றி, பிறந்தது முதலே பார்வையற்றவர் என்கிற வகையிலும் இவர் தனிச்சிறப்பு மிக்க ஒருவர்.
தனது 12-வது வயதில் குடும்பத்தினர் டேப் ரெக்கார்டரை தந்ததில் இருந்து பறவைகளின் ஒலியை புரிந்து கொள்ளும் திறனை ட்ளூஸிக் வளர்த்துக் கொண்டார். அவரால் ஒலியை வைத்தே அது எந்தப் பறவை என்பதை அடையாளம் கண்டுவிட முடியும்.
நம்மிடையே உள்ள பேதங்களை கடந்து, இயற்கை ஒலிகள் தரக்கூடிய "எல்லா நல்ல விஷயங்கள், அழகு மற்றும் ஆறுதல்* ஆகியவற்றை பகிர்ந்து கொள்வது ஒரு சிறப்பு வாய்ந்த தருணம் என்று அவர் நம்புகிறார்.
பால்வளத்துறை மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக வாதிடுபவர்
2018 முதல், ஒரு சுற்றுச்சூழல் நாட்குறிப்பை வைத்து, உள்ளூர் இனங்கள் மற்றும் நீர் ஆதாரங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து, வானிலை பதிவு மற்றும் தாவரங்களை கவனித்து வருகிறார் பயாங்.
திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ள சீனாவின் கஞ்சி மாகாணத்தில் வசிக்கும் அவர், அதிக வெப்பநிலை, உருகும் பனிப்பாறைகள் மற்றும் பாலைவனமாக்கல் போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகளை ஏற்கனவே அனுபவித்து வருகிறார்.
சஞ்சியாங்யுவான் பெண்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவில் பயாங்-ம் ஒருவர். மேலும் அவரது சமூகத்தில் ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மையை ஆதரிக்கிறார்.
உதட்டு சாயம், சோப்பு, பைகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை தயாரிக்கும் பணிகளை பயாங் மேற்கொள்கிறார். மேலும் உள்ளூர் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழலை காக்கும் நோக்கத்தில் இருப்பவர்களை ஊக்குவிக்கும் பணியையும் பயாங் செய்து வருகிறார்.
சுற்றுலா வழிகாட்டி
உள்ளூர் சமூகங்களுக்கு பனிப்பாறைகள் இன்றியமையாத நன்னீர் ஆதாரத்தை வழங்குகின்றன, ஆனால் கொலம்பியாவில் அவை வேகமாக மறைந்து வருகின்றன.
கும்ப்ரஸ் பிளாங்காஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான மார்செலா பெர்னாண்டஸ் மற்றும் அவரது சகாக்கள் பனிப்பாறைகள் பிரச்னை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். சில காலத்திற்கு முன்பு வரை 14 பனிப்பாறைகள் இருந்தநிலையில் தற்போது ஆறு மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இவையும் ஆபத்தில் உள்ளன என்பதை எடுத்துக்காட்டி விழிப்புணர்வை செய்துவருகிறார் மார்செலா.
மலையேறுபவர்கள், புகைப்படக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களைக் கொண்ட குழுவை அழைத்துக் கொண்டு பனிப்பாறைகளுக்கு பயணங்கள் மேற்கொண்டு, அங்கு நிகழும் மாற்றங்களைக் கண்காணித்து, பனிப்பாறை இழப்பைத் தடுக்க ஆக்கப்பூர்வமான வழிகளை மார்செலா உருவாக்குகிறார்.
இதுமட்டுமின்றி, கொலம்பியாவின் 50 ஆண்டுகால உள்நாட்டு ஆயுத மோதலின் போது வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு உதவுவதற்காக "பஜபோர்டோ" (பயணத்தில் அமைதி) என்ற திட்டத்தையும் முன்னெடுத்துள்ளார்.
ஒன்றை இழப்பதால் ஏற்படும் துக்கத்தை சமாளிக்க, காணாமல் போன பனிப்பாறைகள் எனக்குக் கற்றுக் கொடுத்தன. நீங்கள் அவற்றிடம் கேட்டால், அவைகளின் இழப்பு எங்களால் திரும்பப்பெற முடியாத ஒரு சேதம் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் நாம் வேலை செய்தால் நமது தடத்தை அதில் பதிக்கமுடியும்.
மார்செலா பெர்னாண்டஸ்
மருத்துவச்சி
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பேரழிவுகரமான வெள்ளம் ஏற்பட்டபோது, மருத்துவச்சி நேஹா மங்கனி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று தனது உதவிகளை வழங்கினார்.
அவரது தொண்டு நிறுவனமான மாமா பேபி ஃபண்ட் மூலமாக, மங்கனி மற்றும் அவரது குழுவினர் 15,000 க்கும் மேற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உயிர் காக்கும் பிறப்பு கருவிகள் மற்றும் பராமரிப்பு உபகரணங்களை வழங்கினர்.
சுகாதார வசதி குறைந்த பகுதிகள், அவசர கால உதவி மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவும் நோக்கில் இவர் செயல்பட்டு வருகிறார்.
கடலோர பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகளை அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு கொண்டு செல்லும் படகு ஆம்புலன்ஸ் ஒன்றை தொடங்குவதற்கு மாமா பேபி ஃபண்ட் தொண்டு நிறுவனம், இப்போது போதுமான பணத்தை திரட்டியுள்ளது.
காலநிலை தொடர்பான பேரிடர்களை எதிர்கொள்ளும் சமூகங்களில் மருத்துவச்சிகளின் பணி முக்கியமானது. நாங்கள் இருவருமே, பெண்களுக்கு கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்திற்குப் பிறகான கவனிப்பு ஆகியவற்றை அவர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை மோசமடைந்தாலும், அவர்களுக்கு கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்கிறோம்.
நேஹா மங்கனி
சுற்றுச்சூழல் ஆலோசகர்
ஒரு முழு கண்டத்திற்கும் எழுச்சியூட்டும் தலைவர். வஞ்சிரா மத்தாய் சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலான களப்பணி செய்து வருபவர்.
வன்ஜிராவின் தாயும், 2004 அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான வாங்கரி மத்தாய் அவர்களால் நிறுவப்பட்ட கிரீன் பெல்ட் முன்னெடுப்பை வஞ்சிரா வழிநடத்தினார் . இந்த அமைப்பு மரங்களை நடுவதன் மூலம் கென்யாவில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
மத்தாய் இப்போது உலக வள நிறுவனத்தில் ஆப்பிரிக்கா மற்றும் உலகளாவிய கூட்டாண்மைக்கான நிர்வாக இயக்குநராகவும், வங்காரி மாத்தாய் அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார்.
அவர் தற்போது பெசோஸ் எர்த் ஃபண்ட் மற்றும் கிளீன் குக்கிங் அலையன்ஸ் மற்றும் ஐரோப்பிய காலநிலை அறக்கட்டளைக்கு ஆப்பிரிக்காவின் ஆலோசகராக பணியாற்றுகிறார்.
மரங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்முனைவோர் மற்றும் மறுசீரமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுழல் பொருளாதாரத்தைச் சுற்றியுள்ள சமூகம் தலைமையிலான வேலைகள் போன்ற உள்ளூர் முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். இது போன்ற அடிமட்ட முயற்சிகள் 'என்ன சாத்தியம்' என்பதைக் காட்டுவதால் எனக்கு நம்பிக்கையைத் தருகின்றன.
வஞ்சிரா மத்தாய்
மாதவிடாய் நிறுத்தம் செயற்பாட்டாளர்
இசெபெல் ஃபரியாஸ் மேயர் தனது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை அவரது 18 வயதில் முன்கூட்டிய கருப்பை செயலிழப்பு வரை இட்டுச் செல்லும் என நினைத்து பார்க்கவில்லை. இந்த பிரச்சனை கருப்பை சரியாக வேலை செய்வதை நிறுத்தும் போது இந்த நிலை ஏற்படும் அல்லது 40 வயதுக்குட்பட்ட பெண்களில் ஒரு சதவீதம் பேர் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுவர்.
மிக இளம் வயதிலேயே ஆஸ்டியோபோ ரோசிஸுடன் தான் வாழ்வது எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ஃபரியாஸ் வெளிப்படையாக பேசினார்
மேலும் 30 வயதான இந்த பத்திரிக்கையாளர் லத்தீன் அமெரிக்கவில் ஆரம்பகால மாதவிடாய் பிரச்னை தொடர்பாக முதல் பிராந்திய வலைதளத்தினை துவங்கி அதில் மாதவிடாய் பிரச்சனை தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இது தொடர்பாக உளவி வரும் கட்டுக்கதைகளை எதிர்த்துப் போராடுவது இந்த பிரச்சனையுடன் வாழும் பெண்கள் பேசுவதற்கான தளத்தை உருவாக்கி உள்ளார்.
காலநிலை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசகர்
பார்வையற்ற ஒரு மனித உரிமை வழக்கறிஞரான எல்ஹாம் யூசுஃபியன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் போது, குறிப்பாக தீவிர வானிலை நிகழ்வுகளின்போது மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய செயல்திட்டத்தை உருவாக்குவதற்காக குரல் எழுப்பி வருகிறார்.
இரானில் பிறந்து வளர்ந்த யூசுஃபியன், 2016இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். இன்று, மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 1,100 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் உலகளாவிய வலையமைப்பான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கூட்டணியில் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் மீது காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஏற்படும்போது, முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும் நபர்கள், மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து சிந்தித்து முடிவெடுப்பது அவர்களது கடமையின் ஒருபகுதியாகும் என்று கற்பிப்பதே இவரின் நோக்கமாகும்.
மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள், சிக்கலான சவால்களை முறியடிப்பதற்கும், எங்கள் இருப்பை அங்கீகரிக்காத சமூகத்தின் முன்பு எங்களுக்கான தீர்வுகளை உருவாக்கியுள்ளோம். அதனால் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று நாங்களும் போராடுவோம்.
எல்ஹாம் யூசுஃபியன்
விஞ்ஞானி
பெண்களே மற்றும் சிறுமிகளே, நீங்கள் காலநிலைத் தீர்வின் ஒரு பகுதி' என்பது ஓமனைச் சேர்ந்த விஞ்ஞானி ருமைதா அல் புசைதி, 2021 TED கருத்தரங்கில் பேசிய உரையின் தலைப்பாகும். இந்த வீடியோ பத்து லட்சத்திற்கும் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் அரபுப் பெண்களின் உரிமைகளுக்கான அவரது வெற்றியை இது பிரதிபலிக்கிறது.
அல் புசைதியின் நிபுணத்துவம், காலநிலை மாற்றத்திற்கான அரபு இளைஞர் கவுன்சில் மற்றும் ஓமனின் சுற்றுச்சூழல் அமைப்பில் இவருக்கு பதவிக்கு கிடைக்க உதவியது.
காலநிலைக்கான வெளிநாட்டு உதவிகளை வழங்குவது குறித்து பைடன் நிர்வாகத்திற்கும், வளங்குன்றா சுற்றுலா குறித்து கிரீன்லாந்து அரசாங்கத்திற்கும் இவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தென் துருவத்தை அடைந்த இளைய ஓமன் பெண் மற்றும் அரபு பெண்களுக்கு வணிக பேச்சுவார்த்தை திறன்களை வளர்க்க உதவும் ஒரு தளமான WomeX-இன் நிறுவனரும் ஆவார்.
பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முதல் தீர்வு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதாகும். அவர்களின் சமூகங்களில் அவர்கள் கொண்டிருக்கும் செல்வாக்கு, உணர்வுகளையும் செயல்களையும் மாற்றி, நாம் வீடு என்று அழைக்கும் இந்த இடத்தைப் பாதுகாக்கும்.
ருமைதா அல் புசைதி
குழந்தைகள் உரிமை வழக்கறிஞர்
யுக்ரேனிய குழந்தைகளுக்கு போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை சரி செய்ய உதவி வருகிறார் ஒலேனா. அவர் உளவியல் ஆலோசனைகளை வழங்கும் ஒரு தொண்டு நிறுவனமான வாய்ஸ் ஆஃப் சில்ட்ரன் அமைப்பின் இணை நிறுவனர் ஆவார்.
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் யுக்ரேனுக்கு எதிராக போராடத் தொடங்கிய பிறகு, 2019ஆம் ஆண்டு முதல் ரோஸ்வடோவ்ஸ்கா தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
இவரது அறக்கட்டளை இப்போது 14 மையங்களில் 100 க்கும் மேற்பட்ட உளவியலாளர்களுடன் பணிபுரிகிறது. அத்துடன் இலவச ஹாட்லைன் வசதியும் உள்ளது. இது பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு உதவியுள்ளது.
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட A House Made of Splinters என்ற ஆவணப்படத்தில் ரோஸ்வடோவ்ஸ்கா பங்கேற்றுள்ளார். மேலும் அவரது குழுவுடன் இணைந்து 'வார் த்ரூ தி வாய்ஸ் ஆஃப் சில்ட்ரன்' என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.
போக்குவரத்து பாதுகாப்பு பேராசிரியர்
புள்ளி விவரங்களின் அடிப்படையில், சாலை விபத்துகளின் போது ஆண்களை விட பெண்களே அதிகமாக காயமடைவதும், இறப்பதும் இருக்கும் போது, பச தசாப்தங்களாக காரின் விபத்துக்கான பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் ஆண்களின் போலி மாதிரிகளை வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன.
பொறியாளரான ஆஸ்ட்ரிட் லிண்டர் இதை மாற்றுவதற்காக உழைத்துள்ளார்.இது உலகின் முதல் பெண் விபத்து சோதனை போலி மாதிரியை உருவாக்கும் திட்டத்தை வழிநடத்தியது. இதன்மூலம் பெண்களின் உடல் உருவ அமைப்பு பாதுகாப்பு சோதனைகளின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஸ்வீடனின் தேசிய சாலை மற்றும் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனத்தில் (VTI) போக்குவரத்து பாதுகாப்பு பேராசிரியரும், சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியருமாக பணியாற்றும் ஆஸ்ட்ரிட் லிண்டர் பயோமெக்கானிக்ஸ் மற்றும் சாலை காயங்களைத் தடுப்பதில் நிபுணர் ஆவார்.
துகள் இயற்பியலாளர்
இவர் துகள் இயற்பியல் ஆராய்ச்சியாளராக செயல்பட்டு வருகிறார். பேராசிரியர் அமரியா பண்ட் சூப்பர்ஸ்ட்ரிங் கோட்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்
இது இயற்பியலில் உள்ள அனைத்து துகள்கள் மற்றும் அடிப்படை சக்திகளை சிறிய, அதிர்வுறும் ஆற்றல் இழைகளாக மாதிரியாக்குவதன் மூலம் அவற்றை விளக்க முயற்சி செய்து வருகிறார். கருந்துகளைகள் மற்றும் பிக் பேங்கிற்குப் பிறகு முதல் தருணங்கள் பற்றிய விளக்கத்திற்கும் பொருந்தக்கூடிய பொருள் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு
ஆகியவற்றின் கட்டமைப்பிற்கு வரும் போது கோட்பாட்டின் விளைவுப் பற்றிய புரிதலை பண்ட் தனது ஆராய்ச்சியிம் வழியாக ஆழப்படுத்தி இருக்கிறார். இவர் இந்த வருடம் யுனெஸ்கோ மகளிர் விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்பாக வெனிசுலாவின் பவுண்டாசியன் போலார் விருதினை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதைசொல்லி
சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்கும் நபரான, கியுன் வூ காலநிலை மாற்றம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்.
அவரது ஆன்லைன் தளமான தி வியர்ட் அண்ட் தி வைல்ட், காலநிலை அறிவியலை எளிமையான வகையில், மக்களின் பயத்தை அதிகரிக்காத வகையில் விளக்குகிறது. தனது உள்ளடக்கத்தின் வாயிலாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அவர்களை மாற்றங்களை நோக்கிய செயல்பாடுகளை முன்னெடுக்கவும் உந்துதலாக இருக்கிறார் கியூன்.
கிளைமேட் சீஸ்கேக் என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்ட சுற்றுச்சூழல் ஒலி வலையொளியை(podcast) அவர் இணைந்து நடத்துகிறார். இது சிக்கலான காலநிலை மாற்றம் குறித்து தலைப்புகளை எளிமைப்படுத்தி சிறிய விளக்கங்களாக தொகுத்து வழங்குகிறது.
இதுமட்டுமின்றி இவர் ஒரு இளம் நேஷனல் ஜியோகிராபிக் எக்ஸ்ப்ளோரர் ஆவார்.
காலநிலை நெருக்கடி சிக்கலானது, மிகப்பெரியது மற்றும் பயங்கரமானது. பயத்திற்குப் பதிலாக, மென்மையான ஆர்வத்துடன் நாம் அதை அணுகலாம். இதனால் உலகைக் கவனித்துக்கொள்வதற்கு நம் இதயத்தை மென்மையாக வைத்திருக்க முடியும்.
கியுன் வூ
கார்பன் தொழில்நுட்ப வல்லுநர்
போக்குவரத்து துறையில் நீடித்த வளர்ச்சியை ஆதரிக்கும் நபரான ஆனா ஹட்டுனென், பின்லாந்து நாட்டிலுள்ள லஹ்தி நகரத்தில் பசுமை ஆற்றல் கொண்ட போக்குவரத்து இயக்கத்திற்கு அழுத்தம் கொடுத்தவர். இந்த நகரம், ஐரோப்பாவின் பசுமை தலைநகர் என 2021இல் அறியப்பட்டது.
சைக்கிள் ஓட்டுவது, பொதுப் போக்குவரத்து பயன்பாடு போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் குடிமக்கள் கார்பன் புள்ளிகளை பெற அனுமதிக்கும் உலகின் முதல் மொபைல் அப்ளிகேசனை இவர் வழிநடத்துகிறார்.
2030க்குள் காலநிலை நடுநிலையை அடைய ஐரோப்பிய நகரங்களுக்கு உதவும் NetZeroCities என்ற அமைப்பிற்கான காலநிலை நடுநிலை நகரங்களின் ஆலோசகராக அவர் பணியாற்றுகிறார்.
நீடித்த, நிலையான போக்குவரத்து தீர்வுகள் பற்றி மற்றவர்களை உற்சாகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் ஹட்டுனென். நகரங்கள் சைக்கிள் ஓட்டுவதை நோக்கி நகர வேண்டும் என்பதை மிகத் தீவிரமாக வாதிட்டு வருகிறார்.
உலகெங்கிலும் உள்ள நகரங்களில் இருக்கும் அற்புதமான மனிதர்கள் தங்கள் குடிமக்களுக்கு மிகவும் நிலையான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர். உங்கள் பங்களிப்பை கொடுங்கள், நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள், மாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள்!
ஆனா ஹட்டுனென்
பிபிசி 100 பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள 100 செல்வாக்கு மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் பெண்களை பெயரிடுகிறது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணப்படங்கள், அம்சங்கள் மற்றும் நேர்காணல்களை நாங்கள் உருவாக்குகிறோம். அவை பெண்களை மையமாக வைத்து அனைத்து பிபிசி தளங்களிலும் வெளியிடப்படும் கதைகள் ஆகும்.
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்-இல் பிபிசி 100 பெண்களைப் பின்தொடரவும். #BBC100Women எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உரையாடலில் சேரவும்.
பிபிசி 100 பெண்கள் குழு, ஆராய்ச்சி மூலம் சேகரித்த பெயர்கள் மற்றும் பிபிசியின் உலக சேவை மொழிகள் குழுக்கள் மற்றும் பிபிசி மீடியா ஆக்ஷன் மூலம் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களின் அடிப்படையில் ஒரு குறுகிய பட்டியலை உருவாக்கியது.
கடந்த 12 மாதங்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற அல்லது முக்கிய செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய பெண்களையும், அதே போல் சொல்லத் தூண்டும் கதைகளைக் கொண்டவர்களையும் அல்லது குறிப்பிடத்தக்க ஒன்றைச் சாதித்தவர்களையும் அல்லது செய்திகளில் இடம்பெறாமல் இருந்தாலும் தங்கள் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களையும் நாங்கள் தேடினோம். பருவநிலை மாற்றம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான அதன் விகிதாசார தாக்கம் என்பதுதான் இந்த ஆண்டின் கருப்பொருள்.
இதற்கு பொருந்தும் பெயர்களின் தொகுப்பு மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் இருந்து 28 காலநிலை முன்னோடிகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் தலைவர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசியல் சார்ந்த துறைகள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் குரல்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் விரும்பும் மாற்றத்தை அவர்களே நிகழ்த்திக்காட்டிய பெண்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
இறுதிப் பெயர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் பிராந்திய பிரதிநிதித்துவம் மற்றும் சரியான பாரபட்சமற்ற தன்மைக்காகவும் பட்டியல் அளவிடப்பட்டது. அனைத்துப் பெண்களும் பட்டியலில் இடம் பெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
பிபிசி 100 பெண்கள் தயாரிப்புக் குழு வலேரியா பெராஸோ, அமேலியா பட்டர்லி, ரெபெக்காஅ தார்ன், பாவ்லா அடமொ இடோட்டா, கோர்டெலியா ஹெம்மிங், லாரா கார்சியா, சாரா டையஸ், லூசி கில்டர், மய் கனானே, மார்க் ஷியா, வந்தனா விஜய், கிண்டா ஷேர், டரியா தராடாய், லமீஸ் அல்டலேபி, ஃபிரோசே அக்பேரியன், சனா சஃபி, கேட்டரினா கின்குலோவா, டமரா கில் மற்றும் மௌனா பா.
பிபிசி 100 பெண்கள் ஆசிரியர் கொல்னூஷ் கொல்ஷனி
உலக மொழி சேவை தயாரிப்பு: ராபர்த்தோ பெலோ-ரோவெல்லா மற்றும் கார்லா ரோஷ்
வடிவமைப்பு ப்ரினா ஷா, ஜென்னி லா, மேட் தாமஸ், பாலின் வில்சன் மற்றும் ஆலி பொவெல்
உருவாக்கம்: ஸ்காட் ஜார்விஸ், அருண் பாரி, அலெக்ஸாண்டர் இவனொவ், ப்ரீத்தி வகேலா மற்றும் ஹாலி ஃப்ராம்ப்டன்
புகைப்படங்கள் காப்புரிமை: மில்லர் மோப்லி, மசீக் மிக்செக்/ஆக்ஸ்ஃபோர்ட் அட்லியர், ஆரத்தி குமார்-ராவ், ஹம்னா ஹக்கி, கிரேக் கோல்ஸ்கி, பானோ ஏஐ, எல். ரீட், பெஞ்சமின் ஜோன்ஸ், யோபர் அரியாஸ், அமண்டா டிரிப்லெட், ஆனி ராபர்ட்ஸ், டியோர் அப்துகாஃபோர்சோடா, டோய் இன்டனான்ட் தாயிங், இண்டனான்ட் தாயிங் கிரேட்ரைவர்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், ஜேசன் போபெர்க், சைடர் மஹ்யுதீன்/ஏஎஃப்பி, நியூ பேலன்ஸ் பராகுவே, ஜோ ஆன் மெக்ஆர்தர், தி கார்டியர் மகளிர் முன்முயற்சி (CWI), லூசி பைபர், லூயிஸ் மாபுலோ, கிறிஸ்டியன் டாசோ, மார்ட்டின் சாங், கான்ஸ்டான்டின் டெரியாஜின், கேப்ரியல் கேப்ரியல், கேப்ரியல், பேட்ரிக் வாலி, சாரா ஹேல், ஜிமெனா மேடியோட், லூகாஸ் கிறிஸ்டியன்சென், ஹனா வாக்கர்-பிரவுன், வூடி மோரிஸ், சின்யான் யூ, கிறிஸ் பார்க்கர் எட்ஸோர்ட்ஸி செஃபோகாட், தசீர் பெய்க், ஆல்பர்ட் கமங்கா ஜீயா கிரியேஷன்ஸ், சேலம் சாலமன், லூக் நுஜென்ட், ஆர். டேவிட் மார்க்லிம், லீகே. Satu/VTI, FIFA, ஜோஷ் ஃபின்சே, கிபுக்கா முகிசா, ப்ஹீபி மு, க்ரெகரி விப்ரிக், டார்க்கோ டோமஸ் மோப்ரிக், வஞ்சிரா மத்தாய், ருஃபாத் எர்கஷோவ், ஓஸ்வால்டோ ஃபேன்டன், டானி புஜால்டே, கியுலியானோ சால்வடோர், ஃபண்டேஷன் லோரியல், டி,ஓரியல், ஜிம்மி டே/எம்ஐடி, தலையங்கம் கமின்ஹோ - லியா, கைன் ஹ்னின் வை அறக்கட்டளை, ஆண்ட்ரூ சிகோர்ஸ்கி, ரமோன் டோலோசா கால்டெரோன், மரியம் சித்திக், ஃபெரல் பிலிம்ஸ், செபாஸ்டியன் அலியாகா, டியோர் அப்துகாஃபோர்சோடா, தி ஒயிட் ஹெல்மெட்ஸ்/சிவில்லி வர்லீன், சிவில்லி வர்லீன் அபுமெனெஸ், இமானுவேல் எலோ உசாய், ஃபசல் ரஹாம் அர்மான், எமிலியா ட்ரெஜோ, மாட்டியா ஸொப்பெல்லாரோ, மார்ட்டின் லுப்டன்/லைட் கலெக்டிவ், யாஸ்மினா பென்ஸ்லிமானே, பாவ்லோ பொட்டானோவ், மரிஜெட்டா மொஜாசெவிக், லெனாட்ராபெல்லா/இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஸ்போர்ட் க்ளைம்பிங், கால் மோசென்சன், கெட்டி இமேஜஸ்.